Tamil Movie Ads News and Videos Portal

காஞ்சனா 3 விமர்சனம்

எட்டணா சைசுல உள்ள ஒரு கதையை வச்சு காஞ்சனா எட்டுப் பார்ட்டு வந்தாலும் நம்மாளுக துட்டுக் கொடுத்துப் பார்க்கத் தயார்னா…இதை நாம நுட்பமா புரிஞ்சிக்கணும்.

கலை சினிமாவை விரும்பும் ரசிகனுக்குள்ளும் ஒரு டெம்ளெட் ரசிகன் இருக்கிறான். அவன் முத்துராமன் சார், கே.எஸ் ரவிக்குமார் சார் ஆகியோரால் வளர்த்தெடுக்கப் பட்டவன். சுந்தர் சி, ஹரி அண்ணாச்சி ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவன். அவனின் சதவிகிதம் தான் இங்கு அதிகம் என்பதை மிக அழகாக மாஸ்டர் ராகவா லாரன்ஸ் புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் காஞ்சனா சீரிஸில் இப்படி பொளந்து கட்டுகிறார்.

முனி நாம் பார்க்கவில்லை. காஞ்சனா 1 பார்த்தோம். அதில் சரத்குமார் சம்பந்தப்பட்ட செண்டிமெண்ட் ஏரியாவும் பயந்தாங்கொள்ளி மாஸ்டர் பேய் மான்ஸ்டராக உருவெடுக்கும் ஹீரோயிசமும் புல்லரிப்பைத் தந்தது. குறிப்பாக கோவை சரளாவின் சரவெடி காமெடியும் அவரோடு ஸ்ரீமன் தேவதர்ஷினி காம்போவும் பக்கா எண்டெர்டெயின்மெண்ட் பண்ணியது. காஞ்சனா 2 பார்த்தோம். முழுக்க முழுக்க வியாபாரத் தந்திரமும், நுனிப்புல் திரைக்கதையும் தான் இருந்தது. காஞ்சனா ஒன்னை ஜெராக்ஸ் எடுத்து சில பக்கங்களை ஒயிட்னெர் போட்டு அழித்து வைத்திருந்தது. ஆனால் படம் ₹100 கோடி வசூல். காரணம் குடும்பங்களை திரையரங்குங்களுக்கு இழுத்து வரும் வல்லமை படைத்த குழந்தைகளை காஞ்சனா என்ற முதல்பாகம் அந்தளவுக்கு ஈர்த்து வைத்திருந்தது. இதோ காஞ்சனா 3 வந்தாச்சி.

அதே டெய்லர் அதே சட்டை. துணி மட்டும் கொஞ்சம் காஸ்ட்லி அவ்வளவு தான். அதையெல்லாம் விடு. படம் எப்படி? நிச்சயம் வழக்கம் போல குழந்தைகளை ஈர்க்கும் குழந்தைகள் மூலமாக குடும்பங்கள் தியேட்டருக்கு வரும். இங்குதான் ஒரு கேள்வியை வைக்க வேண்டியதிருக்கிறது. மாஸ்டரை நம்பி தியேட்டருக்கு வரும் குழந்தைகள் மாஸ்டரிடம் இருந்து எதை எடுத்துச் செல்லும்? படத்தின் பின்பாதியில் “பிறருக்கு உதவினால் கடவுள் நமக்கு உதவுவான்” என்று ஒரு மெசேச் இருக்கிறது. ஆனால் முன்பாதியில் மெசேசை விட மசாச் தான் அதிகம் இருக்கிறது. மூன்று மாமா பெண்கள் இடுப்பலேயும் ஒரே நேரத்தில் ஏறி உட்கார்கிறார் லாரன்ஸ். கொடுமையிலும் கொடுமையாக ஒவ்வொரு பெண்ணையும் பிகர் பிகர்ணே கூப்பிடுகிறார். மூன்று பேரையும் ஒரே நேரத்துலயும் சமாளிப்பேன் என்ற மீனிங்கில் சில காட்சிகளும் வசனங்களும். படம் பார்க்கும் ஒரு சிறுவன் மனதில் என்ன தோன்றும். ஒரு ஆம்பளைக்கி பொம்பளையை மதிக்கணும்ன்ற அவசியம் இல்ல. அதே போல ஒரு ஆம்பள எந்த இடத்தில் வைத்து வேண்டுமானாலும் பொம்பளையை சீண்ட முடியும். ஆம்பளன்னா சும்மா கிடையாது. மூணு பிள்ளையையும் ஒரே நேரத்துல டாவடிக்கலாம்.” இப்படியான விதை அவன் மனதில் விதைக்கப்படுமா இல்லையா? ஒரு இதழில் ஒரு லேடி ரைட்டர் ஒருமுறை எழுதி இருந்தார். “ஒரு ஆண் குழந்தையின் குஞ்சுமணியைப் பிடித்து இதுக்கு எத்தனை பேரு வரப்போறாளோ என்று அதைத் தூக்கி தூக்கி கொஞ்சினால் அவனுக்குள் அப்போதே ஒரு விசயம் ஊறிவிடும். பெண் நாம் அனுபவிக்க மட்டுமே இலக்கானவள். மூளைக்குள் அவனுக்கும் தெரியாமல் சிறு வயதிலே அந்தப் பொறி போய் உட்கார்ந்து கொள்ளும்” என்று. நம் ஆண் வர்க்கத்தின் உளவியல் அத்தனை மோசமானது.

மாஸ்டர் படம் என்றால் குழந்தைகள் வருகிறார்கள். இதை அவர் புரிந்துகொள்ள வேண்டாமா? இல்லை இந்த சென்சார் போர்டுக்குத் தான் தெரியாதா? படம் யார் தயாரிக்கிறார்கள் என்பதை வைத்தா சர்டிபிகேட் கொடுப்பது? சூப்பர் டீலக்ஸ் போல A போட்டுவிட்டால் எவனாவது குழந்தையோடு தியேட்டருக்கு வருவானா?

படத்தில் அம்மாவை வாடி போடி என்கிறார். பின்னாடி மிதிக்கிறார். அண்ணி இடுப்பில் உட்கார்ந்து கொண்டு அண்ணியும் அம்மா தான் என்கிறார். இதெல்லாம் காமெடி இல்லை. படத்தில் தான் அரசியலுக்கு வருவதற்கான குறியீடுகளை அள்ளி வைத்திருக்கிறார். நல்ல விசயம் அவர்போன்ற நல்லது செய்பவர்கள் அவசியம் வரவேண்டும். ஆனால் தான் செய்கிறேன் செய்கிறேன் என்பதை இந்தளவுக்கு உயர்த்திச் சொல்லணுமா? அதைத் தான் நாங்களே சொல்கிறோமே மாஸ்டர்? உதவியைப் பெறுபவருக்கு தாழ்வுமனப்பான்மை வரும் அளவுக்கா சொல்லிக் காட்டுவது?

படத்திற்கு வருவோம். காஞ்சனா சீரிஸ் படங்களின் பரம ரசிகன் நீங்கள் என்றால் இந்தப்படமும் உங்களை ஏமாற்றாது.