Tamil Movie Ads News and Videos Portal

ரத்னம் – விமர்சனம்

ரத்தம் தெறிக்க தெறிக்க ஹீரோ தீயவர்களிடம் செய்யும் யுத்தம் தான் இந்த ரத்னம்

வேலூர் எம்.எல்.ஏ சமுத்திரக்கனி ஆதரவோடு வளர்கிறார் விஷால். பெற்றோர்கள் அற்ற அனாதையாக இருக்கும் விஷாலுக்கு பிரியா பவானி சங்கரின் வருகை தன் தாயை நினைவூட்டுகிறது. அவரை தன் கண்போல் எண்ணுகிறார் விஷால். அந்தக் கண்ணுக்கு ‘கன்’ பாயிண்டில் சில பிரச்சனைகள் வரிசை கட்டுகின்றன. அந்தப் பிரச்சனைக்கு காரணமானர்களை விஷால் எப்படி வெளுத்துக்கட்டுகிறார் என்பதே ரத்னத்தின் மிச்சசொச்ச கதை

அடிக்க வேண்டும். அதுதான் நடிப்பு என விஷாலிடம் சொல்லிவிட்டதால் விஷால் இஷ்டத்திற்கு பொளந்து கட்டியிருக்கிறார். அட்டகாசமான ஸ்டண்ட் கொரியோவும் விஷாலின் அதிரடிக்கு வலு சேர்த்துள்ளது. பிரியாபவானி சங்கருக்கு பேர் சொல்லும் கேரக்டர். பேர் சொல்லும் படி அக்கேரக்டருக்கு நேர் செய்துள்ளார். யோகிபாபு காமெடி சில இடங்களில் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. மொட்டை ராஜேந்திரன், வி.டிவி கணேஷ் காமெடி சிறப்பு. வில்லன்களாக வரும் மூவரும் மிரட்டல். சமுத்திரக்கனி, முதற்கொண்டு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக வரும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் தன் கேமராவை பல இடங்களில் தன் கையைத் தாண்டி பறக்கவிட்டுள்ளார். விஷுவலில் அது தெறிக்கவிடுகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசை பரபர ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. கூடுமானவரை ஷார்ப் கட்டிங்கால் கவனிக்க வைக்கிறார் எடிட்டர்

கட்ஸ் ஆக வேகம் கூட்டாமல் கதையாகவே வேகம் காட்டியுள்ளார் இயக்குநர் ஹரி. போகிற போக்கில் அமைந்துள்ள சில காட்சிகள் மாஸ்-ஆக அமைந்துள்ளது. மாஸுக்காக அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகள் லேஸ்-ஆக அமைந்துவிட்டது. அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும். தன் அம்மாவை ஒரு காட்சியில் தெய்வத்திற்கு இணையாக சொல்லும் விஷால், மற்றொரு காட்சியில், “சொல்ற அளவுக்கான வாழ்க்கைய என் அம்மா வாழல” என்ற தொனியில் பேசுகிறார். தன் தாய் உலகின் பார்வைக்கு எப்படி இருந்தாலும் புதல்வனில் பார்வையில் அவள் தெய்வம் தான். குழப்பமற்ற கதையில் முளைக்கும் கிளைக்கதைகள் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த ரத்னம் நிச்சயமாக ப்ளாட்டினம் தான்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்