ஒரு மிஸ்ஸிங் கேஸ், ஒரு கொலை கேஸ். இரண்டையும் விசாரிக்கும் காவல் அதிகாரி தமன்குமார். அவர் துப்பறியும் காட்சிகளில் விரியும் வித்தியாசமான சம்பவங்கள் தான் படத்தின் கதை
ஹீரோவாக தமன்குமார் தனது கெத்தான உடல்மொழியால் ஈர்க்கிறார். எம்.எஸ் பாஸ்கர் வரும் இடங்கள் படத்தின் அழியாத தடங்கள் எனலாம். படத்தின் மிக முக்கிய கேரக்டரில் வரும் அருண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நாயகி பாத்திரம் மிகவும் காத்திரமாக அமைந்துள்ளது. அப்பா கேரக்டரில் நடித்துள்ள தயாரிப்பாளர் இயல்பாக நடித்துள்ளார். வேல.ராமமூர்த்தி, பழ கருப்பையா என்ற இரு இலக்கிய வாதிகளும் எதார்த்தவாதிகளாய் படத்தில் அசத்தியுள்ளனர்
மேலும் படத்தில் சில கேரக்டர்களை ரிவில் செய்தால் ட்விஸ்ட் உடையும் என்பதால் அப்படியே விட்டுவிடலாம்.
சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான இசையை தன் மூளை அடுக்களில் இருந்து அள்ளியெடுத்து கொட்டியுள்ளார் அறிமுக இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். அவரின் பிரகாசமான எதிர்காலத்திற்கான டீசர் தான் இந்தப் படத்தின் இசை. ரதீஷ் ஒளிப்பதிவில் தனி முத்திரைப் பதித்துள்ளார். நல்ல குவாலிட்டியான எடிட்டிங் படத்தின் மற்றொரு பலம் எனலாம். இயக்குநர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தனிக்கவனம் செலுத்தி படத்தைச் செதுக்கியுள்ளார். அந்த Output பக்காவாக தெரிகிறது
தெளிந்த நீரோடை போன்ற திரை எழுத்து. இவர் தான் குற்றவாளி என நம்மை முடிவு செய்யவிட்டு அந்த முடிவுக்கு நேரெதிரான முடிவை வைத்து , அதை நம்மை ஏற்கும்படியும் செய்துள்ளார் இயக்குநர் மணிவர்மன். அவருக்குள் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியர் இருப்பதால் அவரின் இயக்கம் மிக ஷார்ப்பாக வெளிப்பட்டுள்ளது. எந்த வகையிலும் உங்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தை வழங்கும் இந்த ஒருநொடி. தியேட்டருக்கு நம்பிச் செல்லலாம்
4.5/5
-வெண்பா தமிழ்