‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்டது.
நடிகர் விஷால் பேசியதாவது…
இந்த மேடையை அமைத்து தந்த உங்களுக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி. உங்களால் இந்தப் பயணம் சாத்தியமானது. ‘ரத்னம்’ ஏப்ரல் 26 ரிலீஸாகிறது. நாளை அதை விட முக்கியமான நாள் ஓட்டுப்போட வேண்டிய நாள். நகரத்தில் தான் வாக்குப்பதிவு கம்மியாக இருக்கும் அது மாற வேண்டும். சினிமாவை வேண்டுமானால் அடுத்த வெள்ளிக்கிழமை தள்ளிப்போடலாம், ஆனால் ஓட்டு அப்படி கிடையாது. ‘ரத்னம்’ பற்றி சொல்ல வேண்டும். ‘மார்க் ஆண்டனி’ எனக்கு புதிய கதவைத் திறந்தது, 100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது. அந்தப்படம் ஆதிக்கிற்கு ஒரு வாழ்க்கையை தந்துள்ளது. ஹரி சார் சொல்வது மாதிரி எதுவானாலும் காது கொடுத்து கேட்க வேண்டும் நம்மை பற்றி என்ன சொல்வார்கள் என நல்லது கெட்டது எல்லாவற்றையும் கேட்க வேண்டும். என் வீட்டில் என் அப்பா என் பெயர் வந்தாலே, அந்த பேப்பரை கட் பண்ணி வைத்து விடுவார். என் அம்மா ஹரி சாரின் தீவிர ரசிகை. எப்போ ஹரி சார் கூட படம் செய்வாய் எனக் கேட்பார். ‘மார்க் ஆண்டனி’க்கு பிறகு, பழைய விஷாலை பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது, ஹரி சார் கூட படம் பண்ணலாம் என சொன்னார்கள். நானே அவருக்கு போன் பண்ணி நான் சார் நாம் படம் பண்ணலாம் என்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். மூன்றாவது படம் எனும் போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது, உடனே இதைப்பண்ணலாம் என்றேன். சரியான தயாரிப்பாளராக ஸ்டோன் பெஞ்ச் வந்தார்கள், ஜீ ஸ்டூடியோஸ் வந்தது. எல்லாம் நன்றாக அமைந்தது. ஹரி சார் எப்போதும் ஹீரோவுக்கு முக்கியம் கொடுப்பார். அதே நேரம், அவர் ஒவ்வொரு படத்திலும், ஒரு பெண்மணிக்கு முக்கிய பாத்திரமாக வைப்பார். அது மிகப்பெரிய விஷயம். சமுத்திரகனி அண்ணன் உண்மையிலேயே அண்ணன். அவர் ஒரு கதை சொல்லியுள்ளார், அது படமாவதற்காக தான் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். யோகிபாபு மிகச்சிறந்த நண்பர், அவர் வீட்டில் எப்போதும் என் வீட்டில் இருப்பது மாதிரி இருப்பேன். சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார். ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஷாட் 5 நிமிடம் நினைத்தே பார்க்க முடியாது, அதை கேட்டு செய்கிறார். சுகுமார் அதை அட்டகாசமாக எடுத்துள்ளார். என் டார்லிங் கனல் கண்ணன், என்னை நல்லா ஆக்ஷன் ஹீரோ என சொல்லக் காரணமே அவர் தான். எனக்கு 100 தையல் அதற்கு பாதி காரணம் அவர் தான், அவர் அமைத்த காட்சி படத்தில் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். கேப்டன் சொன்ன மாதிரி, நான் என்ன சாப்பிடுகிறேனோ அதே தான் கடைசி லைட் மேன் வரைக்கும், அதை கடைசி வரை கடைப்பிடிப்பேன். நான் பேசுவது பிரச்சனையாகிறது என்கிறார்கள் ஆனால் நான் என் படத்திற்காக பேசவில்லை. தனஞ்செயன் சார் சொன்னாரே ஒரு சின்னப்படம் வருகிறது என்று, அதற்காகத்தான் போராடுகிறேன். சினிமாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது, சினிமா எல்லோருக்குமானது யார் வேண்டுமானாலும் வரலாம், அவ்வளவு தான். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது அதை விட்டுட்டு நான் ஏன் அரசியலுக்கு போகனும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். இந்தப்படம் ஹரி சாரின் உழைப்பு, அவர் யுனிவர்ஸில் நாங்கள் வேலை பார்த்துள்ளோம் உங்களுக்கு எண்டர்டெயினர் காத்திருக்கிறது, நன்றி.