அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாததால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது. கிட்டத்தட்ட வாழ்க்கையைப் போலவே திரைக்கதையும் அடுத்து என்ன நிகழும் என்பதை யூகிக்க முடியாமல் இருந்தால் தான் இண்டெர்ஸ்டிங்காக இருக்கும். யூகி ரசிகர்களுக்கு அப்படியொரு அனுபவத்தை ஓரளவு கொடுத்துள்ளது
படம் துவங்கியதுமே ஒரு பெண்ணைப் பற்றிய விசாரணை நடக்கிறது. அடுத்து ஒரு கொலை நடக்கிறது. இரண்டிற்கும் ஓர் தொடர்பு இருக்கிறது. சிபிஐ ஆபிசரான நட்டி ஒரு இன்வெஸ்டிகேசனை நடத்துகிறார். எக்ஸ் எஸ்.ஐ ஆன கதிர் ஒரு புதிரை அவிழ்க்க முயற்சிக்கிறார். உளவுத்துறை அதிகாரியான நரேன் ஒரு விசாரணையை நடத்துகிறார். காணாமல் போனதாகச் சொல்லப்படும் கயல் ஆனந்தி என்னவானார்? கொலை செய்யப்பட்ட ஜான் விஜய்யின் பேக் ஸ்டோரி என்ன? இந்த மூன்று நாயகர்களும் எந்தப்புள்ளியில் ஒன்றிணைகிறார்கள்? என்பதே யூகியின் யூகிக்க முடியாத திரைக்கதை
கதிர், நரேன், நட்டி மூவருமே கொடுத்த ரோலை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். நட்டி, நரேன் இருவரின் கேரக்டர்களை விட கதிர் கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருப்பதால் அவரே படம் முடிவில் அதிக ஸ்கோர் செய்கிறார். கயல் ஆனந்தி பரிதாபத்தை அள்ளுகிறார். எப்படி ஆனந்தி அந்த முகம் இன்னும் அப்படியே இருக்கு!!! ஜான் விஜய் காட்டியிருக்கும் பதட்டம் நிறைந்த வில்லத்தனம் ஓ.கே ரகம். வினோதினி காட்டியிருக்கும் நெகட்டிவ் ரோல் பெர்பாமன்ஸ் வெல்டன்
படத்தின் ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தி தெரிகிறது. சேஷிங் காட்சிகளில் நன்றாக மெனக்கெட்டுள்ளார் கேமராமேன். பின்னணி இசையில் படம் தன் பலத்தை இழக்காமல் பயணிப்பதே இசை அமைப்பாளருக்கு கிடைத்த வெற்றி தான்
சற்று பிசகினாலும் என்னப்பா இது? இப்படி இழுக்கிறாங்க என சோர்வடையச் செய்யும் கதையை மிக லாவகமாக நகர்த்தி படத்தின் முடிவு வரைக்கும் பரபரப்பு குறையாமல் பார்த்திருக்கிறார் இயக்குநர். சீரான டிஸ்கசன், கடுமையான உழைப்பினாலே இப்படியான திரைமொழி சாத்தியப்பட்டிருக்கிறது. படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் தங்கள் இலக்கை நோக்கி ஓடுகிறது. அதற்கான காரணத்தில் இன்னும் வலு கூட்டியிருக்கலாம். மத்தபடி இந்த யூகி நீங்கள் யோசிக்காத பாதையில் அழைத்துச் சென்று பல சர்ப்ரைஸ்களை கொடுக்கும்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்