Tamil Movie Ads News and Videos Portal

”உங்கள் ஆதரவாளர்கள் என்னை தேச விரோதி என்பார்கள்” – கமல்ஹாசன்

கொரோனா நுண்ணுயிரி ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணமான சூழலை சமாளிப்பதில் மோடி அரசு தோற்றுவிட்டதாக குற்றம் சாட்டி, கமல்ஹாசன் பிரதமர் நரேந்திரமோடிக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “நீங்கள் ஆளும் நாட்டில் வாழும் ஒரு குடிமகனாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கொரோனா உயிர்கொல்லி தொற்று பரவி வரும் இந்த சூழலில் உங்களது தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டதாக நான் உணர்கிறேன். எப்படி ரூபாய் மதிப்பிழப்பு காலத்தில் எந்தவித அறிவிப்பும் இன்றி அரசு தடாலடியாக செயல்பட்டதோ அதே பாணியில் இப்பொழுதும் அறிவிப்பின்றி ஊரடங்கு அமுலுக்கு வந்ததால், பொருளாதார முறையில் பிற்பட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு மாதம் முன்பே செலுத்திவிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அதை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நீங்கள் நடுத்தர மக்களை காப்பதில் தான் அக்கறை காட்டுகிறீர்கள். சேமிப்பு இன்றி, வருமானம் இன்றி, வாழ்வாதாரம் இழந்து பசியால் வாடத் தொடங்கியிருக்கும் ஏழை மக்களுக்கு எந்தவிதமான நிவாரண திட்டங்களும் தீட்டப்படவில்லை என்பது தெரிகிறது. உங்கள் அரசு பால்கனியில் நின்று கைதட்டச் சொல்லும் ஒரு பால்கனி அரசாகவே செயல்படுகிறது. எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற சொன்னீர்கள். அடுத்த ரொட்டி சுட அவர்களுக்கு எண்ணெய் இன்றி தவிக்கிறார்கள். நாங்கள் உங்கள் நடவடிக்கையால் உங்கள் மீது கோபமாக உள்ளோம். ஆனால் உங்களோடு இணைந்தே இருக்கிறோம். நான் இது போன்று எழுதுவதால் உங்கள் ஆதரவாளர்கள் என்னை தேச விரோதி என்பார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கொரோனாவில் இருந்து பாதுகாப்பதாக சொல்லி மக்களை வறுமைக்கும் பசிக்கும் பலி கொடுக்கப் போகிறீர்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. “ என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.