“தனித்துவமான படம் என்ற அடைமொழியோடு வெளியாகி உள்ளது என் பெயர் ஆனந்தன் படம். அந்த அடைமொழிக்கு எடுத்துக் கொண்ட கதையின் மூலமாக நியாயம் சேர்த்திருக்கிறார்கள். அதுபெரிய ஆறுதல். ஸ்ரீதர் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படியான கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற அவரது வேட்கையும் முயற்சியும் நிச்சயம் பாராட்டத்தக்கது.
படத்தின் கதையை சிலவரிகளில் சொல்வதனால்…படத்தின் ஹீரோ சந்தோஷ் ஒரு குறும்பட இயக்குநர். அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்து பெரும்படம் இயக்க ஆயத்தமாகும் போது அவரை கடத்திச் சென்றுவிடுகிறார்கள். கடத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.
கூத்துக்கலை மீதான அக்கறையை நம் தமிழ்சினிமா கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற இயக்குநரின் ஆதங்கம் பின்பாதியில் மிக அட்டகாசமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாய் படத்தில் வரும் அந்தக் கூத்துப்பாடல் மிக அருமை. அந்த ஒருபாடலுக்காகவே திரைக்கதையில் முன்பாதியில் உள்ள சில தொய்வுகளை மறக்கலாம் மன்னிக்கலாம்.
ஹீரோ சந்தோஷ் வழக்கம் போல் தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். கொஞ்ச நேரமே வந்தாலும் அதுல்யா அழுத முகமாகவே வந்து கடுப்பேற்றுகிறார். படத்தில் தான் அப்படி என்றால் பாவம் நிஜத்திலும் படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் தயாரிப்பாளரையும் கடுப்பேத்தினார்.
படத்தின் மிக முக்கியமான மூன்றுபேரின் நடிப்பும் மெச்சத்தக்கது. அவர்களின் கதாப்பாத்திரங்களைக் குறிப்பிட்டுச் சொன்னால் முழுக்கதையையும் சொல்வதாகி விடும் என்பதால் தவிர்க்கிறோம்..படத்தின் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே மிரட்டல் ரகம். எடுத்துக்கொண்ட களம் மிக கனமாக இருப்பதால் சில கவனப்பிழைகளை மறந்து என் பெயர் ஆனந்தனை வரவேற்கலாம்
-மு.ஜெகன்சேட்