வாசனையின் இரவுகள் காமத்தின் வாசல்களாகும். காமம் கிளர்த்தும் அத்தரின் வரலாற்றோடு துவங்குகிறது நாவல். அப்துல் கரீம் என்ற குடும்பத்தின் வாயிலில் நுழைத்து நம்மை யாமத்தித்குள் அழைத்துச் செல்கிறார் எஸ்.ரா.. ஆஹா என்னவொரு அனுபவம்
அந்திமழை யூட்யூப் சேனலுக்காக பவா செல்லத்துரை அவர்களை ஒரு நேர்காணல் செய்தேன். எழுத்தாளர்களைப் பார்த்தால் என்னையும் அறியாமல் கேட்கும் கேள்வி ஒன்று.. “சார் படித்தே ஆகவேண்டிய ஐந்து நூல்களை பரிந்துரையுங்கள்” என்பது. அப்படி நான் கேட்டு பவா செல்லத்துரை பகிர்ந்த ஐந்து நூல்களில் எஸ்.ராவின் இந்த யாமமும் ஒன்று
பண்டாரம் ஒருவர், அவருக்கு துணை/வினையாக ஒரு நாய்
அப்துல் கரீம் அவர் மனைவிகளான ரஹ்மானி, சுரையா, வகிதா இவர்களின் அன்பு விரும்பியான சிறுவன் சந்தீபா
கிருஷ்ணராயப்பர், அவரின் அந்தந்த நேரத்து துணையான எலிசபெத்
பத்ரகிரி அவன் மனைவி விசாலா, பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலம், சிற்றம்பலத்தின் மனைவி தையல்நாயகி
இவர்கள் அல்லாது இன்னும் சில கதை மாந்தர்கள் யாமத்தில் இருக்கிறார்கள்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு உணர்வுகள், வெவ்வேறு உலகம்..அவர்களின் உலகத்தின் ஊடாக நமக்கு எதோவொன்று கிடைத்துக் கொண்டே இருக்கிறது
பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும், தாயை சிதைத்த கொடுமைக்கார தந்தையை விட்டுப்பிரிந்து சித்தியிடம் வளர்கிறார்கள். பத்ரகிரி தன் தம்பியை மிகப்பெரிய உயரத்தில் வைக்க ஆசைப்படுகிறான். அவனின் ஆசை நிறைவேறுதற்கான எல்லா தகுதியோடும் சிற்றம்பலம் வளர்கிறான். தம்பிக்கு தாயற்ற குறை நீக்கி வளர்க்கிறான் பத்ரகிரி. காலம் கடக்கிறது. லண்டனுக்கு மேல் படிப்பிற்குச் செல்லும் திருச்சிற்றம்பலம் தன் மனைவி தையல்நாயகியை அண்ணன் பத்ரகிரி வீட்டில் விட்டுச் செல்கிறான். மனைவி விசாலா மற்றும் ஒரு குழந்தையோடு இருக்கும் பத்ரகிரிக்கு தம்பி மனைவி மீது ஈர்ப்பு வருகிறது. அதன்பிறகு இவர்கள் வாழ்வில் விதி நின்று சிரிக்கிறது. யாமத்தில் வரும் இவர்கள் கதை ஒரு சாபத்தோடு முடியாமல் ஒரு ஆன்ம விசாரணையோடு முடிகிறது..
நாய் செல்லும் திசையெல்லாம் அதன் பின்னால் அலையும் பண்டாரம் ஒன்று. நாய் வந்தவழி வந்து ஒரு வீட்டில் தங்க நேர்கிறது பண்டாரத்துக்கு. அந்த வீட்டில் ஒருபெண் தன் அப்பனோடு அற்ப ஜீவனாய் வாழ்ந்து வருகிறாள். பண்டாரத்திற்கும் அந்தப் பெண்ணுக்கும் ஒருவித ஈர்ப்பில் கூடுகை நடந்து விடுகிறது. அதன்பின் சில நாட்களில் நோய்முற்றிய அந்தப் பெண்ணின் அப்பன் இறக்கிறான். அந்தப்பெண் கர்ப்பமாகிறாள். அவளுக்கு பிரசவ வலி வருகிறது. அந்த நேரத்தில் நாய் கிளம்பி விடுகிறது. பண்டாரமும் அந்தப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு நாய் பின்னால் கிளம்புகிறது. இந்தக் கதையின் தீவிரம் வாசித்து முடித்தும் மனதை விட்டு அகலவே இல்லை
மூன்று மனைவிகளையும் விட்டுவிட்டு ஓடிச்சென்ற அப்துல் கரீம் கதையும் அதன்பின் அந்த மூன்று பெண்களின் நிலையும் என விரியும் யாமத்தின் பயணம் இரவைத் தாண்டிய நீளம் கொண்டது
எஸ்.ராவின் எழுத்தில் நிறைய தகவல்களை சேகரிக்க முடியும். யாமத்தில் அதுவும் கிடைக்கிறது… அதைத்தாண்டியும் யாமம் அகம் நிறைக்கிறது