Tamil Movie Ads News and Videos Portal

யாதும் ஊரே யாவரும் கேளீர்- விமர்சனம்

அகதிகளின் அவதிகளைப் பேசும் ஒரு பெரிய சினிமா

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் உயிர் தப்பிய நாயகன் விஜய்சேதுபதி மிகத்திறமையான மியூசிஷியன். அவருக்கான வாய்ப்புக்குத் தடையாக இருக்கிறது அகதி என்கிற பட்டம். புனிதன் என்ற பெயர்கொண்ட அவர் இன்பநிதி என்ற பெயரில் பயணிக்கிறார். அதை வைத்து அவர் மீது பெரும் கொலைவெறியோடு அவரைச் சுற்றுகிறார் மகிழ்திருமேனி. மேலும் விஜய்சேதுபதிக்கு மேகா ஆகாஷோடு ஒரு காதலும் ட்ராவலாகிறது. பல புள்ளிகளில் பயணிக்கும் கதை எப்படி ஒற்றைப் புள்ளியில் முடிகிறது? இதுவே திரைக்கதை

விஜய்சேதுபதிக்கு இலங்கை அகதி வேடம். வேறோர் தளத்தில் பயணிக்க வேண்டிய நடிப்பு. மிகையின்றி நடித்துள்ளார். அந்த இலங்கை மொழி மட்டும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. மேகா ஆகாஷின் நடிப்பில் பெரிய என்கேஜிங் இல்லை. அழகாக இருக்கிறார் அவ்வளவே! மகிழ்திருமேனி தனது கம்பீரக்குரல் போலவே கம்பீரம் காட்டுகிறார். இன்னும் அவரை நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். மறைந்த நடிகர் விவேக் திரையில் தோன்றும் போது அவர் பற்றிய நினைவுகள் மனதை கலங்கடிக்கின்றன

படத்தின் பின்னணியில் இருந்து படத்தை முன் நகர்த்திச் செல்லும் ஒற்றைக் காரணி நிவாஸ்.கே பிரசன்னா தான். தனது இசையால் இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது இசை தான் நின்று பேசுகிறது. நெடுநேரமாக நின்று பேசிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியை விட.
ஒளிப்பதிவாளர் தன் பணியில் நல்ல நேர்த்தியைக் கொண்டுள்ளார்.

அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். அப்போது தான் அவர்களின் திறமையை உலகம் அறியும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த். இலங்கையின் போருக்குப் பின்னுள்ள அரசியல், அகதிகள் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்த சந்திக்கும் போராட்டங்கள், அவர்களின் உளவியல் பிரச்சனைகள் என இன்னும் பலவற்றை படத்தில் பேசியிருக்கலாம். முன்பாதி திரைக்கதை துண்டு துண்டாக பயணிப்பதால் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. பின்பாதியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து நேர்த்தியாக முடித்திருக்கிறார் இயக்குநர். ஆக்கத்தில் சிறுசிறு பிசிறுகள் இருந்தாலும் கொண்டுள்ள நோக்கத்தால் உயர்ந்து நிற்கிறது யாதும் ஊரே யாவரும் கேளீர்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்

#YaadhumOoreYaavarumKelir