ரைட்டர் தமிழ் சினிமாவிற்கு ஒரு வலி”மை”யான அப்டேட்
அடி மட்டத்தில் இருப்பவன் அதிகார வட்டத்தைத் தொட நினைத்தால் அதிகாரனின் சட்டத்திட்டம் எல்லாம் கூர்வாளாக வேலை செய்யும்..அது எளியவனின் வாழ்நாளை காலி செய்யும் என்பதை நேர்கோட்டில் சொல்லி இருக்கிறார் ரைட்டர்
சினிமா என்ற பெரிய காட்டுக்குள் எத்தனையெத்தனை அக்னிகுஞ்சுகள். நீலம் புரொடக்ஷன் கண்களுக்கு மட்டும் அது எப்படித்தான் தெரிகிறதோ!!!
கதை சொல்லலிலும் அதை காட்சியாக கவனப்படுத்தியதிலும் ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர் ப்ராங்க்ளின்
ரைட்டர் சமுத்திரக்கனிக்கு இரு மனைவிகள் இருவரின் வெளிமன ஈகோ, ஆழ்மன அன்பு, இருவரையும் ஒருவராய் காணும் கனி கதாப்பாத்திரத்தின் கனிவு, அழுத்தி அழுத்தி அமுங்கிப் போன தன் பரம்பரையில் தம்பி மேல் எழவேண்டும் என தவிக்கும் சுப்பிரமணிய சிவா கேரக்டர் காட்டும் நிஜமுகம், தன் முன்னால் நடக்கும் எல்லாவற்றையும் புரிந்தும் புரியாமலும் வதைபடும் பட்டதாரி ஆய்வுமாணவன் அரியின் பதட்டம் மனம் என கேரக்டர்களின் வார்ப்பில் அவ்வளவு கூர்மை. அத்தனை நேர்மை
கோவிந்த் வசந்தா வாத்தியத் தேர்வில் வாத்தியாரை மிஞ்சும் மாணவன் போல ஷார்ப்பாக பி.ஜி.எம் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவில் இருக்கும் சிம்ப்ளிசிட்டி தான் கதைக்கான பக்கா பப்ளிசிட்டி
முன்பாதியில் மெல்ல நடைபோடும் கதை பின்பாதையில் நல்ல நடையாக மாறி முடியும் போது முடியெழச்செய்து விடுகிறது.
நாம் பேசும் விடுதலைக்கும் நமது தேசிய விடுதலை கதைக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதது அறமற்றவர்கள் நடத்தும் அடக்குமுறை. இதுதான் எதார்த்தம். எதார்த்தத்தை ஏற்றுகொண்டு வாழ்வோர் தான் இங்கு மெஜாரிட்டி. அந்த மெஜாரிட்டி ஆபத்தானது என்பதை பா.ரஞ்சித் பட்டறையாளர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்..இருக்கட்டும்!
/காவல்துறைக்கு எதிரான பார்வை இப்படத்தில் இல்லை. ஆனால் காவல்துறை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று இந்த ரைட்டர் விரும்புகிறார். இரண்டு ஷாட்களில் மன அழுத்தத்தால் தன் முடிவை தானே எழுதிக்கொண்ட காவல்துறை இளைஞர்களை காட்டும் போது மனம் அதிர்ந்துவிட்டது. எளியவர்களை போலீஸ் சிலநேரம் மனசாட்சியின்றி நொறுக்குவதற்குப் பின்னால் இருக்கும் கதைகள் எல்லாம் கற்பனையை விட பயங்கரம்/ இன்னும் ரைட்டருக்கு நிறைய writ up வரும்..வரணும்.
-மு.ஜெகன் கவிராஜ்