‘அசுரன்’ படத்தில் தனுஷ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகையாக பதிவு செய்த மஞ்சு வாரியர் தற்போது தன் நீண்ட நாள் கனவாக எண்ணிக் கொண்டிருந்த மம்முட்டியின் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு நாயகியாக நடிக்க மஞ்சுவாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும், அது போல் “96” படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சுவாரியரிடம் தான் முதலில் பேசப்பட்டது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
இது தொடர்பாக பேசிய மஞ்சு வாரியர், “இது போன்ற தகவல்கள் எல்லாம் எங்கிருந்து தான் கிளம்புகின்றன என்று தெரியவில்லை. இதைக் கேட்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ரஜினி படத்தில் நாயகியாக நடிக்க எந்த தயாரிப்பு நிறுவனத்திலிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. அதுபோல் ஒரு விருது வழங்கும் விழா மேடையில் “96” படத்தில் நான் நடிக்கவிருந்தேன் என்ற தகவலை முதன்முறையாக நான் கேள்விப்பட்டேன். அப்பொழுது அப்படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.