பாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்த போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள் – இயக்குனர் பாரதிராஜா பேச்சு.
டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கே.பாக்யராஜ், மதுரா பாலன் மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாடல் இசை வெளியீட்டு இயக்குனர் பாரதிராஜா பேசும்போது,
“இன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது.
இன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச்சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம்.
நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார், டாக்டர் மாறன்.
பாக்யராஜ் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான். அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன். அவன் வாழ்க்கை மாறியது. அவனை ஹீரோவாக்கிய போது சிலர் எனக்கு பைத்தியம் பிடித்ததா என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன். எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறார் என்று சொன்னேன். அதன் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவு தான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
அதே போல, டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார். சூப்பர்” என்றார்