Tamil Movie Ads News and Videos Portal

திகில் குறும்படம் ‘வேக் அப்’!

திரைப்படத் துறையில் இருக்கும் பலருக்கும் ஊரடங்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், மீண்டும் தங்களைப் புதுப்பித்துக்கொண்டு புதுமையான முயற்சிகளில் ஈடுபடவும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. கடந்த இரண்டு மாதங்களில் திரையுலகைச் சேர்ந்து பிரபலங்கள் பலரும், தங்கள் இல்லத்தில் இருந்தபடியே குறும்படங்களை உருவாக்கிய செய்திகளை நாம் அறிய நேர்ந்தது. நடிகை விஜயலட்சுமியும் இயக்குநரான அவரது கணவர் ஃபெரோஸும் இணைந்து குறும்படம் ஒன்றை உருவாக்கியதன் மூலம் இந்தப் பட்டியலில் சமீபத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள். ‘வேக் அப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம், கணவன் மனைவி தங்கள் குழந்தையுடன் வீட்டில் இருக்கும்போது நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை, முதுகுத் தண்டை சில்லிடச் செய்யும் திகிலுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. கணவன் மனைவியாக ஃபெரோஸ் மற்றும் விஜயலட்சுமி நடிக்க, அவர்கள் குழந்தையாக நிலன் நடித்திருக்கிறார்.

ஒரு நிமிடம் 37 நொடிகள் ஓடும் டிரைலர், குறும்படம் குறித்த விவரங்களைத் விளக்குகிறது என்றாலும், இது திகில் படமா அல்லது விறுவிறுப்பு மிகுந்த உளவியல் ரீதியிலான படமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இது குறித்து இயக்குநர் ஃபெரோஸிடம் கேட்டபோது, “குறும்படம் ஒன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அவ்வளவுதான். மற்றபடி இதற்கொரு முத்திரையிட்டு வகைப்படுத்த விரும்பவில்லை. ஐபோன் பயன்படுத்தி எங்கள் வீட்டிற்குள்ளையே படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் குறும்படத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.