தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகும் ஒரு வித அச்சத்துடன் எதிர்நோக்கி இருக்கும் நிகழ்வு என்றால் அது மாஸ்டர் பட விழாவின் இசை வெளியீடு தான். தளபதி விஜய் தனது முந்தைய படங்களின் இசை வெளியீட்டில் தான் அதிகமாக அரசியல் பேசினார். அதை மனதில் வைத்தோ என்னவோ இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது வருமான வரித்துறை நடிகர் விஜயை சுற்றி வளைத்தது. அதைத் தொடர்ந்து நடந்த பல களேபரங்கள் அரசியல் தளத்திலும் அதிர்வுகளைக் கொடுத்தது. இதுவரை தனது படங்களின் இசை வெளியீட்டை ரசிகர்கள் முன்னிலையில் நடத்தி வந்த விஜய் முதன்முறையாக இசை வெளியீட்டில் ரசிகர்களை தவிர்த்திருக்கிறார்.
ஆனாலும் நிகழ்வை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘மாஸ்டர்’ படமும் மிக முக்கியமான அரசியலைப் பற்றி பேசியிருப்பதால் இசை வெளியீட்டின் மூலம் படம் வெளியாவதில் ஏதும் சிக்கல் எழக்கூடாது என்கின்ற காரணத்தால் தான் படக்குழு இப்படி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டில் விஜய் அரசியல் களம் காணுவாரா..? என்கின்ற சேதியோடு, அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்கின்ற சேதியும் தெரியும் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர்.