Tamil Movie Ads News and Videos Portal

விஜயானந்த்- விமர்சனம்

 

ஒரு நிலப்பரப்பின் வாழ்வியலை பதிவுசெய்வது வேறு. ஒரு தனி மனிதரின் வாழ்வைப் பதிவு செய்வது வேறு. சற்று பிசகினாலும் ஒரு ஆவணப்பட Feel-ஐ கொடுத்து விடும் சூழல் தனிமனித வாழ்வை படமாக்கும் போது வரும். அதை மிக லாவகமாக கையாண்டு ஜெயித்துள்ளார் இயக்குநர் ரிஷிகா சர்மா

விஜயனாந்த் என்ற ஒரு சாமானியன் உழைப்பாலும் நேர்மையாலும் தனி சாம்ராஜியத்தையே நிறுவும் நிஜத்தை திரைகதையாக மாற்றியுள்ளார்கள். கன்னடத்தில் பெரும் தொழிலதிபராக வலம் வரும் விஜயானந்த் அவர்களின் வாழ்வுச் சித்திரம் மிக இயல்பாக துவங்குகிறது

அச்சு மிஷின் வைத்து வாழ்வை நடத்தும் அப்பாவிடம் அடுத்தக்கட்ட தொழில் வளர்ச்சிக்கு அனுமதி கோருகிறார் மகனாக விஜயானந்த் கேரக்டரில் வரும் நிஹால். தந்தை இருப்பதிலே நிறைவெய்தும் மனிதர். மகனோ பெரும் பாய்ச்சல் மனநிலை கொண்ட உழைப்பாளி. அப்படி கடின உழைப்பால் வளர நினைக்கும் அவருக்கு சமூகத்திலும் தொழில் போட்டியாளர்களிடமிருந்து கடும் தடைகள் வருகின்றன. அதையெல்லாம் தடார் தடார் என உடைத்து ஹீரோ எப்படி உயர்கிறார் என்பதே இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்களாக நம்முன் விரிகிறது

நிஹால் மிக இயல்பாக நடித்துள்ளார். முன்னேறத் துடிக்கும் துடிப்புமிக்க இளைஞனின் உடல்மொழியையும் தீவிரத்தன்மையையும் தனக்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார். சிரி பிரஹலாத், ஆனந்த் நாக், வினயா பிரசாத் உள்பட நடிகர்களின் பங்களிப்பில் விஜயானந்த் முதல் பாசிட்டிவ் டிக்கை அடித்துள்ளது..

தயாரிப்பாளர் டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர் படத்திற்கு என்ன தேவையோ அவை எல்லாவற்றையும் தாராளமாக கொடுத்துள்ளார். புரொக்டஷன் வேல்யூ ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. கீர்த்தன் பூஜாரியின் கேமரா எல்லாக் காலகட்டங்களையும் மிக அழகாக கண்முன் காட்டுகிறது. கோபி சுந்தர் இசையில் சகுந்தலா எனும் பாடல் திரும்பத் திரும்ப கேட்கும் ரகம். அப்பாடலின் விஷுவலும் சிறப்பு. பின்னணி இசையும் கதை கூட்டியுள்ள கணக்கிற்கு கச்சிதமாக டேலி ஆகியுள்ளது.

ஜெயித்தவரின் மகன் தன் தந்தையின் வெற்றியைச் சொல்லும் பாணியில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ரிஷிகா சர்மா. “பரபர விறுவிறு” கமர்சியல் படங்களுக்கான காட்சியமைப்புகளைச் செய்து படத்தை இன்ட்ரஸ்டிங்காக கொண்டு போயுள்ளார் இயக்குநர். சிற்சில காட்சிகளின் நீளத்தை மட்டும் சற்று ஷார்ப் செய்திருக்கலாம். சில படங்கள் மட்டும் தான் உழைத்தால் உயரலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். அந்த வரிசையில் விஜயானந்த் படத்தையும் வைக்கலாம்

3.5/5

-மு.ஜெகன் கவிராஜ்