‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் சென்று நேரடியாக அழைத்துச் சென்றதும், பனையூரில் அவரது வீட்டில் வைத்து பல மணி நேரம் விசாரணை செய்ததும் அரசியல் நோக்கோடு நடைபெற்ற நிகழ்வுகளா என்ற கேள்வி எழுந்தது. அது அடங்குவதற்குள் பா.ஜ.க கட்சியினை சேர்ந்தவர்கள், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குள் நீங்கள் எப்படி படப்பிடிப்பு நடத்தலாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டு விஜய்க்கு எதிரான அரசியலை உறுதிபடுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில், “முறையான சம்மன் அனுப்பியப் பின்னரே விஜய் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இது ஏதோ அரசியல் ரீதியிலான காழ்ப்பு போல் தெரிகிறது. மேலும் பா.ஜ.க கட்சியினர் படப்பிடிப்புத் தளத்தில் சென்று போராட்டம் செய்தது தவறானது. இப்படி செய்தால் படப்பிடிப்பு எப்படி நடக்கும்.. அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் விஜய் தன் ரசிகர்களை அங்கு நிறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும். ஆனால் விஜய் அந்த இடத்தில் நிதானத்துடன் பக்குவமாக நடந்து கொண்டார். இன்னும் சொல்லப் போனால் அவர் மிகச் சரியாக நடந்து கொண்டார்.” என்று பேசியுள்ளார்.