அஜீத்தின் ரசிகர்களும் விஜய்யின் ரசிகர்களும் தல தளபதி என்கின்ற பெயர்களில் ஹேஷ்டேக் உருவாக்கி இணையதளம் முழுவதும் எப்போதும் அடித்துக் கொண்டு திரிந்தாலும் கூட அவர்கள் இருவருமே நட்போடு தான் பழகி வருகிறார்கள். கடந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட “நண்பர் அஜீத்” என்று விஜய் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட இருவரும் பேசிக் கொண்ட செய்தி வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடா யுனிவர்சிட்டியில் திரைப்பட இயக்கம் தொடர்பாக படித்து வருகிறார்.
தற்போது கனடாவில் கடுமையான ஊரடங்கு அமலில் இருப்பதால், தனது ஹாஸ்டல் அறையிலேயே மாட்டிக் கொண்டு தவிக்கிறார் சஞ்சய். இதனால் மன வருத்தத்தில் இருக்கும் விஜய் அவ்வபோது மகனிடம் வீடியோ கால் மூலமாக பேசி வருகிறார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விஜய் போன் செய்த நடிகர் அஜீத், சஞ்சய் எப்படி இருக்கிறார் என்று விசாரித்ததோடு, “கூடிய விரைவில் நிலைமை சரியாகி விடும். அவர் நல்லபடியாக ஊர் வந்து சேர்வார்” என்று விஜய்க்கு ஆறுதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.