வாழ்க்கை என்பது பணத்தால் ஆனதல்ல…அது அன்பால் ஆனது என்பதையும், வாழ்வை வெறும் ரேஸ் போல கையாண்டால், முடிவில் லாஸ் மட்டும் தான் மிஞ்சும் என்பதை சிலபல மாஸ்களோடு சொல்லியிருக்கிறது வாரிசு
கோடிகளில் பிஸ்னெஸ் செய்யும் சரத்குமாருக்கு மூன்று மகன்கள்..ஸ்ரீகாந்த், சாம், விஜய். இளைய மகன் விஜய்யை சரத்திற்கு பிடிக்காது. காரணம் ஒன்னு கதையில் இருக்கு. வீட்டை விட்டு விலகி வாழும் விஜய் வீட்டிற்குள் வந்த பிறகு நடக்கும் எமோஷ்னல் காமெடி காதல்..உள்ளிட்ட இன்னும் சிலபல சம்பவங்களின் தொகுப்பே வாரிசு கதை.
இந்தப்படத்தின் ஒன் அண்ட் ஒன்லி எனர்ஜி விஜய் விஜய் விஜய். நமத்துப் போன சில வசனங்களை கூட தன் அதிரிபுதிரி மாடுலேசன்களால் அழகாக பேசி ஈர்க்கிறார். ரஞ்சிதமே… பாடலின் நடன அசைவில் விஜய் காட்டியிருப்பது வயதைத் தாண்டிய மாயாஜாலம். பிஸ்னெஸ் எதிரி பிரகாஷ்ராஜுக்கு சவால் விட்டு கடக்கும் போதும், அம்மாவையும் அப்பாவையும் எமோஷ்னலில் கடக்கும் போதும் அட்டகாச ஸ்கோர் செய்கிறார். அவரைத் தாண்டி படத்தில் நம்மை ரசிக்க வைப்பவர் சரத்குமார். சிங்கம் போல கம்பீரம் அவருக்கு. அந்தக் கம்பீரத்தை அப்படியே இறக்கி வைத்துவிட்டு வேறோர் பரிணாமத்தைக் காட்டும் போது மனதைத் தொடுகிறார் நாட்டாமை. ராஷ்மிகா ஓகே ரகம். ஸ்ரீகாந்த், சாம், பிரகாஷ்ராஜ், தலை மட்டும் காட்டியுள்ள எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட இன்னும் ஒரு டசன் நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யோகிபாபு மட்டும் அவ்வப்போது காமெடி செய்து அசத்தியுள்ளார்.
கார்த்திக் பழனியின் கேமரா பிரம்மாண்டத்தை காட்டும் போதும், விஜய்யின் என்ட்ரி ஷாட்களை காட்டும் போதும் ரசிக்க வைக்கிறது. தமனின் இசையில் பாடல்களும் பேக்ரவுண்ட் ஸ்கோரும் பக்கா ரகம்
ஒரு குடும்பம், அவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் வாரிசு என்றளவில் மிகவும் மெலிதான கதை தான். அதைச் சொன்ன விதத்திலும் பெரிய புதுமை இல்லை தான். ஆனால் படம் ஒருநொடி கூட நம்மை போரடிக்க வைக்காது. காரணம் விஜய் நடத்தும் மேஜிக். இவ்வளவு கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் கிடைத்தும் வம்சி ஈசியாக கேரக்டர்களை வடிவமைத்து விட்டாரோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. இருப்பினும் இந்த வாரிசு மனதை கொள்ளை கொள்ளவே செய்வார். காரணம் அன்பு தான் உலகின் ஆகப்பெரும் சொத்து என்ற நிஜத்தை வாரிசு ஆணித்தரமாகச் சொல்கிறார்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்