சூப்பர் குட் ப்லிம்ஸ் படமென்றால் நிச்சயமாக அப்படம் நம்மை ஏமாற்றாது என்ற வரலாற்று நம்பிக்கையை வரலாறு முக்கியம் படம் காப்பாற்றியுள்ளதா?
கண்டிப்பை கண் துடைப்பு போல காட்டும் அப்பா அம்மா வாய்க்கப்பெற்ற மகன் என்ன செய்வான்? எதிர் வீட்டில் எந்தப்பெண் வந்தாலும் லவ் பண்ணுவான் தானே? யெஸ் ஜீவா அதையேச் செய்கிறார். நெய்ச்சிலை போல வந்து இளைஞர்களின் மனம் உருக்கும் கேரள அழகியாக எதிர்வீட்டில் குடிவரும் காஷ்மிரா மேல் காதல் கொள்கிறார் ஜீவா. அந்த வீட்டில் இன்னொரு அழகியும் உள்ளார். அவர் ப்ரக்யா. அவர் ஜீவா மீது மையல் கொள்கிறார். அந்த இருபெண்களின் அப்பா துபாய் மாப்பிள்ளைகளுக்குத் தான் தன் பெண்களை கொடுப்பேன் என்பதில் மிக உறுதியாக நிற்கிறார். முடிவில் ஜீவாவின் காதல் என்னானது? என்பதை சில அடிப்பொலி காமெடியோடும் சில கடிகடி காமெடியோடும் சொல்லியிருக்கிறது வரலாறு முக்கியம்
இப்படத்தின் முதல் வெற்றியே காஸ்டிங் தான். ஜீவா இக்கதைக்கு 200% பொருத்தமாக இருக்கிறார். அவர் இடதுகையில் கேண்டில் பண்ணும் கேரக்டர் என்பதால் அதகளம் செய்துள்ளார். விடிவி கணேஷோடு சேர்ந்து அவர் அடிக்கும் லந்துகள் எல்லாம் சிக்ஸர் பந்துகள். காஷ்மிரா ப்ரக்யா இருவரும் அழகில் அளவின்றியும், நடிப்பில் அளவோடும் கவர்கிறார்கள். விடிவி கணேஷ் தான் முழுப்படத்தில் முக்கால்வாசி படத்தைக் காப்பாற்றிய பில்லர். மனிதர் குதிரை மாத்திரையைப் போட்டுவிட்டு செய்யும் அட்ராசிட்டி செம்ம. கே.எஸ் ரவிகுமார் பல இடங்களில் பட்டாசு கொளுத்துகிறார். முன்னாள் காதலியைக் கண்டு அவர் நெளியும் தருணம் மாஸ் மெட்டிரியல். சரண்யாவும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். ஒரு காட்சியில் மட்டுமே தோன்றும் லைட்மேன் தங்கப்பாண்டியும் ஸ்கோர் செய்கிறார்
ஷான் ரகுமான் இசையில் பாடல்கள் ஓரளவு பராவாயில்லை ரகம். பின்னணி இசையில் கமர்சியல் மூட் கிரியேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அது படமெங்கும் ஓர் எனர்ஜியைத் தருகிறது. சக்தி சரவணின் கேமரா கோவையழகையும் படத்தில் வரும் பாவைகளின் அழகையும் அள்ளிக்கொள்ளும் படி அள்ளித்தந்துள்ளது
மிகவும் சாதாரணமான ஒரு கதையில் குட்டிக் குட்டி சுவாரஸ்யங்களைச் சேர்த்து படத்தை கரை சேர்த்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். காமெடி பல இடங்களில் அட்டகாசமாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. பெண்கள் பற்றிய ஆண்களின் உளவியலை போகிறப் போக்கில் சொல்லியிருப்பது ரசனை. தொய்வில்லாமல் நகரும் படத்தில் இன்னும் 20 நிமிடங்களை வெட்டியிருந்தால் படம் இந்த வார ப்ளாக்பஸ்டர்.
பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் வரலாறு முக்கியம் தகராறு செய்யாது கய்ஸ்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்