வாங்க போங்க என்றவரை போகவே விடாத தமிழ்சினிமா
2003-ஆம் ஆண்டில் தமிழில் நயன்தாரா அறிமுகமான அய்யா படத்தில் ஒரு காட்சி வரும்
நெப்போலியன் நயன்தாரா விடம் சொல்வார்..என்னம்மா செல்லத்துரை மாமா வந்திருக்கான்..வாங்க போங்கன்னு கூட
சொல்லாம இருக்க” என்பார் உடனே நயன்தாரா வாங்க…போங்க..என்று மிக மோலோட்டமாகச் சொல்வார்.
இப்படி வாங்க போங்க என அறிமுகமான நயன்தாரா அந்தப்படத்தில் காட்டிய வெகுளித்தனம் கலந்த நடிப்பில் வெறித்தனமாக சொக்கிப்போனான் ரசிகன்..
அடுத்து அடித்த ஜாக்பாட்டில் சூப்பர்ஸ்டாரோடு இணைந்து நான் சூப்பர் ஸ்டார் ஜோடிடா என சிவகாசி பட்டாசாக வெடித்தார்..
அப்படியே வல்லவன் மூலமாக பல சிம்புக்களை உருவாக்கிவிட்டு அப்பசங்களை லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே என பாட வைத்தார்..
தலைவர் படம் தளபதி படம் வரை வந்த நயன்தாரா தலயுடன் நடித்த பில்லா விரித்தது ஒரு அட்டகாசமான கம்பளம். பில்லாவில் ரசிகர்களை வாரிச்சுருட்டிக்கொண்ட நயன்தாராவிற்கு சத்யம் போன்ற படங்கள் சத்திய சோதனையாக அமைந்தாலும் யாரடி நீ மோகினி படம் மூலம் நயன்தாரா வை குடும்பப் பெண்கள் எல்லாம் நெட்டி முறித்த வரலாறும் நிகழ்ந்தது..
அதுவரை இளைஞர்களின் ஐகான் ஆக இருந்த நயன் குடும்பத்தலைவிகளின் இதயத்தில் குடிபுகுந்தார்.
இப்படி தமிழில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர்க்கு தலையில் இடி போல சில பிரச்சனைகளும் படங்களும் வந்தன.
ப்ராப்ளங்களை கண்டு பயந்தவருக்கு லைப் செட் ஆகாது. அதைத் துணிந்து எதிர்கொள்பவர்களுக்கு பிரச்சனைகள் எல்லாம் மேட்டரே கிடையாது. அதில் நயன்தாரா இரண்டாம் வகை. தன் தளராத நடையால் தடைகளை பயப்பட வைத்தவர்..
அக வாழ்வில் சின்னச்சின்ன சறுக்கலும் கசப்பும் வந்தது என்றால் ஒரு கட்டத்தில் குசேலன், வில்லு, ஏகன், ஆதவன் என அடுத்தடுத்து அடி. ஆனாலும் நயன் அசரவில்லை. தான் எப்பவுமே சினிமாவில் ராணி தான் என்பது போல ராஜாராணியாக மீண்டு வந்தார் மீண்டும் வந்தார்….
இங்கு சும்மா சும்மா ச நானும் ரவுடி தான் என பில்டப் விடுபவர்களுக்கு மத்தியில் நானும் ரவுடி தான் படம் மூலமாக பெர்பாமில் தான் எத்தகைய ரவுடி என்பதை நயன் நிரூபித்தார். தமிழ்சினிமா மட்டும் அல்லாமல் தமிழகமே ஆர் யூ ஓ.கே பேபி என நயனை உச்சி முகர்ந்தது. விக்னேஷ் சிவன் செதுக்கிய அப்படத்தில் நயன்தாரா காட்டிய பிரகாசம் அடடா பிரமாதம்
இதற்கு மேல் இந்த நயன்தாரா பெயர் போஸ்டரில் இடம் பெற்றாலே ரசிகன் தியேட்டருக்கு வருவான் என்ற எண்ணம் தயாரிப்பாளர்கள் மத்தியில் உருவானது…அதன்பிறகு அவர் சோலாவாக நடித்தப்படங்கள் எல்லாம் கல்லா கட்டுவதில் கலக்கின. அதற்கான அடித்தளத்தை மாயா அமைத்துக் கொடுக்க, அறம் அதை தரமாக பதிவு செய்தது. அதன் பிறகு கோலமாவு கோகிலாவில் நயன்தாரா சாதித்ததெல்லாம் வேறலெவல் ஹிஸ்டரி.
தமிழ்சினிமாவில் நடிகைகளைப் பொறுத்தவரை நான்கு ப்ளாப்ஸ் கொடுத்தால் அடுத்து இனி கல்யாணம் தான் என்பார்கள். ஆனால் நயன்தாரா தான் இறங்கினாலும் ஏறி வந்தார். இதைத்தான் இயக்குநர் லிங்குசாமி குறிப்பிட்டார்.
ஒரு நடிகையை வெறும் நடிகையாக சமூகம் கொண்டாடுவது வேறு. நடிகையை ஒரு ஆளுமையாக சமூகம் பார்ப்பது வேறு. நயன்தாரா ஆளுமையான நடிகை. நடிகைகளில் அவர் ஒரு ஆளுமை.
தமிழ் ரசிகர்களுக்கு இவர் மட்டும் தான் பேயாக நடித்தாலும் தேவதையாக தெரிவார்.
தொழில் மீதும் ரசிகர்கள் மீதும் நயன்தாரா வைத்திருக்கும் விஸ்வாசம் தான் இன்னும் அவரை நோக்கி பிகில் போட வைக்கிறது.
கண்ணுக்கு கண்ணாக என பெண்களை ஒப்புக்கு புகழ்ந்து விட்டு தப்புக்கணக்குப் போடும் இந்தச்சமூகத்தில் நயன்தாரா போன்ற சினிமா பின்புலம் இல்லாத நடிகை இப்படியொரு உச்சம் தொட்டிருப்பதெல்லாம் கொண்டாட வேண்டிய விசயம். இன்று நயன்தாரா பிறந்தநாள் கொண்டாடுகிறார். நாமும் அவரை கொண்டாடுவோம்..