Tamil Movie Ads News and Videos Portal

வடக்குப்பட்டி ராமசாமி- விமர்சனம்

ரசிகனை லாஜிக் சொல்லி சரிக்கட்டி அனுப்புறதை விட, மேஜிக் வச்சு சிரிப்புக்காட்டி அனுப்பலாம் என முடிவு செய்து களம் கண்டுள்ளார் வடக்குப்பெட்டி ராமசாமி

கடவுளை நம்பாத சந்தானத்திற்கு கடவுளை வைத்து காசு பார்க்கலாம் என்ற ஐடியா உதிக்கிறது. அந்த ஐடியாவின் மூலம் ஊரில் கண்ணாத்தாள் என்ற அம்மன் கோவில் உருவாகிறது. கோயிலை வைத்து கொள்ளையில் ஈடுபடும் சந்தானத்திற்கு வட்டாட்சியர் தமிழ் மூலமாக சிக்கல் வருகிறது. அந்தச் சிக்கலுக்குள் முக்குளித்து சந்தானம் எழுவதற்குள் நாம் விலா நோக சிரித்துக்கடக்கிறோம் மீதிப்படத்தை

ஜஸ்ட் லைக் தட் ரேஞ்சில் சந்தானம் ஸ்கோர் பண்ற கேரக்டர் என்பதால் அசத்தியுள்ளார். மேகா ஆகாஷுக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி வரவிடாமல் கதை பண்ணி சந்தானத்தை கிரேட் எஸ்கேப் ஆக வைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி. மேகா ஆகாஷ் ஓகோ ஆகா எனச் சொல்லும்படி ஒன்றுமில்லை. மாறனும் செசுவும் படத்தின் இரட்டை ஹீரோக்கள் எனும்படி களத்தில் கெதி கலங்க வைத்துள்ளனர். வாட் எ பெர்பாமன்ஸ்! அவர்களால் தியேட்டர் பல இடங்களில் அதிர்கிறது. குறிப்பாக செசு பரதநாட்டியம் அல்டியோ அல்டி. தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, ஜான் விஜய், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ரிவ்யூவர் இட்ஸ் பிரசாந்த், கூல் சுரேஷ், ரியாஸ் என யாருமே சோடை போகவில்லை

ஜான் ரோல்டன் தன் வேலையில் சோல்டரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம் அளவை மீறாத பின்னணி இசை, அருமையான பாடல்கள் என சிறப்பாக உழைத்துள்ளார். கேமராமேன் தீபக் சரியான அணுகுமுறையால் திரையை அழகுப்படுத்தியுள்ளார்.

சின்னக் கதையில் நிறைய சுவாரஸ்யங்களை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். வசனங்களும் வலிந்து திணிக்காமல் அமைந்துள்ளது. லாஜிக் என்பதை எல்லாம் மூட்டையில் கட்டி வைத்துவிட்டு தியேட்டரில் அமர்ந்து 100% காமெடிக்கு கியாரண்டி தருகிறார் ராமசாமி
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்