Tamil Movie Ads News and Videos Portal

வாழை- விமர்சனம்

தமிழ்சினிமாவை வாழ வைக்கும் வாழை

வாழ்வில் நாம் பட்டதை எழுத்தாக்குவது ஒரு கலை. அந்த எழுத்து தரும் உணர்வை அப்படியே காட்சிப்படுத்தி, காட்சிகளுக்குள் ஒரு தொடர்புபடுத்தி, ஒழுங்குற ஒரு சினிமாவாக்குவது என்பது ஆகப்பெரும் கலை. மாரி செல்வராஜ் ஆகப்பெரும் கலைஞன் என வாழை மூலம் மீண்டும் நிருபித்திருக்கிறார்

சில வாரங்களாக ஆனந்தவிகடனில் மாரி செல்வராஜ் எழுதும், ‘சம்படி ஆட்டம்’ என்ற தொடரை வாசித்து வருகிறேன். அந்தத் தொடரில் தானும் தன் சுற்றமும் வாழைத்தார் சுமந்த வறுமைக் கதையை எழுதியிருந்தார். அந்த நிஜம் என்னோடு அதிகம் ஒத்துப்போனது. தலையில் இரண்டு வாழைத் தார்களை சுமக்கும் போது கழுத்து நரம்பு ‘வின் வின்’ என்று வலிக்கும். ஊரில் காங்கரட் போடும் வேலைக்குச் செல்கையில் சாந்து சட்டியை அந்த ‘வின் வின்’ வலியோடு சுமந்திருக்கேன். இரவில் கழுத்தில் எண்ணெய் தேய்த்துவிட்டு படுத்தகாலமெல்லாம் உண்டு. வறுமை தின்ற அனைவருக்கும் இந்த வாழை எமோஷ்னல் விருந்து வைக்கும்

சிவணைந்தான், சேகர் என்ற இரு நண்பர்களும் வாழைத்தார் சுமந்த வலியோடு கழுத்தை சின்னதாக கோணலாக்கிக் கொண்டு பள்ளியில் சுற்றுகையில் நமக்கும் வலிக்கும். அந்தக் காட்சியை மாரிசெல்வராஜ் காட்சிப்படுத்திருக்கும் விதம் அபாரம். சிவணைந்தான், சேகர் என்ற இரு நண்பர்களின், ரஜினி கமல் ரசிகச் சண்டையை, இவ்வளவு கவித்துவமாக எந்தச் சினிமாவும் பதிவு செய்யவில்லை.

பால்யத்தில் டீச்சர் மீது வரும் இயல்பான இனக்கவர்ச்சியை எந்த மன கவுச்சையும் இன்றி திரையில் காட்டியுள்ளார் மாரி. நிகிலா விமல் டீச்சராகவும், கலையரசன் தோழராகவும், சிவணைந்தான், சேகர் இருவரும் நாம் கண்ட அல்லது காண மறுத்த சிறுவர்களாகவும் திரையில் வாழ்ந்துள்ளனர். திவ்யா துரைசாமியிடமிருந்து எவ்வளவு அழகான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. வாழ்த்துகள். அரிவாள் சுத்தியல் சின்னத்தை கையில் பச்சை குத்தியிருக்கும் சிவணைந்தானின் அம்மா பலபடி உயர்ந்து நிற்கிறார்

ஒரேசாதியாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பொருளாதார கனத்தை வைத்து சில மதிப்பீடுகள் உண்டு என்பதை உச்சபட்ச நேர்மையோடு சொல்லிருக்கும் மாரியை நிறைய தோழர்கள் தோளோடு அணைப்பார்கள். ஒரு கம்யூனிச பின்புலத்தோடு வாழும் எளிய உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண், உழைப்பின் அவசியத்தையும் உழைப்புச் சுரண்டலின் போது ஏற்படும் கோபத்தையும் வெளிப்படுத்தவே செய்வார். அது வாழையில் அசாத்தியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணீர் ததும்பும் காட்சிகள் க்ளைமாக்ஸில் இருந்தாலும் புன்னகை நிறைக்கும் காட்சிகளும் படமெங்கும் உண்டு

சந்தோஷ் நாராயணனுக்கு இந்த வருடத்திற்கான பெஸ்ட் ஸ்கோரிங் அவார்டு கன்பார்ம். தேனீஸ்வரர் மாரியின் எழுத்துக்கு துளியும் பங்கம் வராமல் எழுத்தின் மேல் தன் கேமராவால் தங்கம் வார்த்திருக்கிறார். ஒவ்வொரு விஷுவல்ஸும் ஸ்கீரின் ஷாட் மெட்டிரியல்ஸ். அதி அற்புதமான படத்தொகுப்பும் ஆகச் சிறப்பு

தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘வாழையை’ தோரணம் கட்டி கொண்டாட வேண்டும். கொண்டாடுவார்கள்
4.5/5
-மு.ஜெகன் கவிராஜ்