உலகிற்கு ஒட்டுமொத்தமாக ஒரே வானம் என்றாலும், மனிதர்கள் தங்களுக்கு ஏற்ப தனக்கென ஒரு வானத்தைக் கொண்டிருப்பார்கள். அந்த வானத்தின் கீழ் உள்ள வாழ்க்கையைப் பேசுகிறது வான் மூன்று படம்
ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமி இருவரும் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிறார்கள். காரணம் இருவருக்கும் தனித்தனி காதல் தோல்வி! இன்னொரு கதையில் வினோத் கிஷன் தன் காதல் மனைவி அபிராமி வெங்டாச்சலத்தை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்னொரு கதையில் டெல்லி கணேஷ் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்தால் மட்டும் உயிர் பிழைக்கும் சூழலில் உள்ள தன் மனைவியை காப்பாற்ற போராடுகிறார். வெவ்வேறு மருத்துவமனைக்குள் சூழ்ந்துள்ள இவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நிகழ்கிறது என்பதே படத்தின் கதை
படத்தின் முதல் பலம் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். ஆதித்யா பாஸ்கர் வெகு இயல்பாக நடித்துள்ளார். அம்மு அபிராமி சில எமோஷ்னல் காட்சிகளில் அசத்தியுள்ளார். வினோத் கிஷன் மெல்லிய உணர்வுகளை கண்ணீரால் கடத்த முயற்சித்துள்ளார். அபிராமி வெங்கடாச்சலம் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. டெல்லி கணேஷ்& லீலா சாம்சன் ஜோடி எல்லோரையும் விட நடிப்பில் அதிக ஸ்கோர் செய்துள்ளனர்.
பின்னணி இசை மற்றும் பாடல்களில் நல்ல முயற்சி செய்துள்ளார் இசை அமைப்பாளர் ஆர்2.ப்ரோஸ். சார்லி தாமஸின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தது. விஜய் மனோஜ் படத்தை இன்னும் ஷார்ப்னெஸ் செய்திருக்கலாம்
வாழ்வில் நம்மோடு கலந்த உறவுகளை இழந்து விடக்கூடிய தருணம் மட்டும் வாய்க்க கூடாது. ஆனால் இயற்கையின் நியதி அப்படியல்ல. அதையும் ஏற்று வாழவேண்டும் என்பதைப் படம் பேசுகிறது. ஆனால் இவ்வளவு அழகான விசயத்தைப் படம் ட்ராமா ஸ்டைலில் பேசுவது தான் பெருங்குறை. உணர்ச்சிகள் காட்சி வடிவில் நம் கண்களைத் தொடும் போது அது இதயத்திற்குள் இறங்க வேண்டும். அந்த மேஜிக் வான் மூன்றில் நடக்கவில்லை. இன்னும் கொஞ்சம் எட்டிப்பிடித்தால் நிச்சயமாக வான்மூன்று நம்மை வானாளவு புகழ வைத்திருக்கும்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்