Tamil Movie Ads News and Videos Portal

வாடிவாசல்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

“அப்பா தோற்ற களத்தில் மகன் வெல்கிறான்” என்ற பொறிதான். கதையின் கரு.

செல்லாயி ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்த விளையாட்டுப் பையன்களாக இருக்கிறார்கள் பிச்சியும் அவனது மச்சான் மருதனும். இருவரும் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டைப் பற்றி கமெண்ட் அடிக்க, அதை ஒரு கிழவர் கேட்டுவிடுகிறார். இந்த இருவரின் வேரையும் ஊரையும் கிழவர் பேசிப்பேசி அறிகிறார். அவர்களுக்குள் நடக்கும் உரையாடலில் மதுரை மண் வாசமும், வீரப்பாசமும் அவ்வளவு இயல்பாக வெளிப்படும்.

ஜல்லிக்கட்டு களம் மாடுகளாலும் அதை அணைபவர்களாலும், அவற்றைப் பார்க்கும் மனிதர்களாலும் நிறைந்து கிடக்க, ஜமீன் தாரரின் காரிக்காளை வருவதைப் பற்றிய பேச்சு அவர்களுக்குள் வருகிறது..ஜமீன் தாரரின் காரிக் காளையை அடக்கத்தான் இந்த இருவரும் வந்திருக்கிறார்கள் என்ற உண்மை கிழவருக்குத் தெரிகிறது. குறிப்பாக பிச்சியின் முழு நோக்கமே அதுதான் என்பதை கிழவர் உணர்கிறார். அதன் பின் வேறு இரண்டு காளைகளை பிச்சி அடக்குவதைப் பார்த்த ஜமீன் தாரருக்கும் பிச்சி தன் காளையை அடக்கத்தான் வந்துள்ளான் என்று தெரிகிறது. சைலண்ட் கர்வம் கொண்ட ஜமீனுக்கு தெரிய வரும் அந்தக் கணம் தான் இந்தக் கதையின் மாஸ்டர் பீஸ் தருணம்..

தன் தந்தையின் குடலைச் சரித்த இந்த மாட்டின் உடலைச் சரிக்க பிச்சி தவியாய் தவிப்பான். அதன்பின் நடக்கும் காட்சிகள் எல்லாமே விறுவிறு க்ளைமாக்ஸ்.

இந்த நாவலைத் தான் சூர்யாவை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் படமாக எடுக்கவிருக்கிறார். நிச்சயமாக அடியேனுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கதையில் பிச்சியின் அப்பாவிற்கு என்று வெற்றிமாறன் ஒரு ஸ்ட்ராங்கான பின் கதை வைப்பார். மேலும் நாவல்படி பிச்சி மறவர் சமூகத்தைச் சேர்ந்தவன். காளைக்கு உரிமையாளரான ஜமீன் தாரரும் மறவர் சமூகம் தான். ஆனால் பிச்சி ஜமீன் தார் முன்னால் அப்படியொரு பணிவோடு நிற்பான்; குறுகுவான். இருவரும் ஒரே ஜாதியாக இருந்தாலும் அங்கு வர்க்க வேற்றுமை உண்டு என்பதை செல்லப்பா நயம்பட எழுதிருப்பார். வெற்றிமாறன் இந்த இடத்தில் வேறுபடக்கூடும். அது கலைப்புலி தாணுவின் வணிகவேட்டைக்கு பெருந்தீனி கொடுக்கலாம்..

பிச்சி கேரக்டரில் சூர்யா 100% பொருத்தமாகவே இருப்பார். மருதன் கேரக்டருக்கும் ஒரு பெரிய நடிகரைப் போடலாம். ஜமீன் தார் கேரக்டருக்கு மோகன்லாலும், முருகு கேரக்டருக்கு கலையரசனும், கிழவர் கேரக்டருக்கு ராஜ்கிரணும் நடித்தால் … சும்மா ஒரு ஆசைதான்

இந்த நூலுக்குள் புகுமுன் நூல் பற்றிய பெருமாள் முருகன் அவர்களின் முன்னுரை அட்டகாசமாக அமைந்துள்ளது. நூலில் நூல் அளவில் என்றாலும் மிகவும் காத்திரமாக வெளிப்பட்டுள்ள அதிகார வெறியை உள்வாங்கிக் கொள்ள பெருமாள் முருகன் உதவுகிறார். பிச்சி போன்ற செறிவான வீரன் வென்ற பிறகும் குருக வேண்டிய அளவில் தான் சமூகப்பாடு இருக்கிறது. அதிகார போதையில் இருப்பவனின் தோல்வி சமூகத்தின் சமநிலையைக் கூட குலைக்கும் என்பதை நாவல் நச் என்று இரண்டுத் தோட்டாச் சத்தம் மூலமாக வெளிப்படுத்துகிறது..

இங்கு பிச்சியின் வெற்றியை விட முக்கியமானது. ஜமீர்தாரரின் வெறியை அடக்கும் சூழல். அச்சூழலை உருவாக்கத் தொடர்ந்து பிச்சிகள் ஜெயிக்க வேண்டும்!