ஒருகொலையும் கொலை சார்ந்த விசாரணையும் தான் V1. கொலை கேஸை மிக நுண்ணியமாக விசாரிக்கும் நாயகனுக்கு இருட்டு என்றால் ஒவ்வாமை என்ற பிரச்சனை இருக்கும். அதனால் விசாரணையில் அவருக்கு நெருக்கடியும், விசாரணையில் வரும் பல்வேறு திருப்பங்களும் படத்தின் திரைக்கதை.
படத்தின் பிரதான பாத்திரங்கள் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ, நாயகி விஷ்ணுபிரியா இருவரும் தான். இன்வெஸ்டிகேஷன் செய்யும் அதிகாரிகளான அவர்களிருவரிடமும் அப்படியொரு மிடுக்கு. லிஜீஸ் கேரக்டர் சற்று நேரம் தான் என்றாலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் படம் நெடுக இருக்கிறது. யார் இந்தக்கொலையைச் செய்தார்கள் என்ற விசாரணையில் வரும் ட்விஸ்ட்களில் எல்லாம் அட போட வைக்கிறார் இயக்குநர் பவேல் நவகீதன். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என்று போகும் திரைக்கதை ஒருசில நேரத்தில் ஓவர் டோஸாகவும் தோன்றிவிடுவது தான் இந்தப்படத்தின் சிறிய தொய்வு.
படத்தின் ஒளிப்பதிவு இரவுக்காட்சிகளை அழகாக காட்டியுள்ளது. குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியில் லைட்டிங் ஆசம். பின்னணி இசை ஒரு திரில்லர் படத்திற்கான உழைப்பைக் கொடுத்து படத்தைத் தேற்றி இருக்கிறது. கதை சொல்லலில் இருந்த பிரம்மாண்டம் கேரக்டர்கள் வார்ப்பிலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்டிலும் இருந்திருந்தால் V1 இன்னொரு ராட்சசன் போல் மின்னி இருக்கும். மின்னல் இல்லாவிட்டாலும் மின்மினி பூச்சியாக நம்மை கவரவே செய்கிறது இந்த V1
-மு.ஜெகன்சேட்