Tamil Movie Ads News and Videos Portal

உபதேச மஞ்ஜரீ -ஒரு புத்தகம்/ஒரு பார்வை

தென்காசி மாவட்டம் கல்லூத்து என்ற ஊர் தாண்டி துத்திகுளம் எனும் கிராமம் கடந்தால் சிவலிங்கபுரம் என்றொரு குட்டி ஊர் வரும். அங்கு தன் வீட்டு முன் சிறு சிவன் கோவில் எழுப்பி, அட்சர சுத்தமாக வழிபட்டு வருகிறார். இச்சித்தர்.

சகோதரி அன்னலெட்சுமி இங்கு ஒருமுறை அழைத்துச் சென்றார். அப்போது இவரிடம் நெடுநேரம் பேசும் வாய்ப்பு அமைந்தது. “நாலு மனுசனால நல்லவனா நினைக்கப்படுதது தான்டே அறம். வெறும் வாய்ச்சொல்லுல ஒன்னும் கிடையாது. செயல்ல தான் எல்லாம் இருக்கு. நீ கும்பிடுத அய்யா ஏகப்பட்ட உபதேசம் சொல்லிருக்காரு. எல்லாத்தையும் கடைபிடிக்க முடியலன்னாலும் அவரோட வாக்கியத்துல எதாவது மூனு வாக்கியத்தை மட்டும் கடைபிடிச்சிக்க.. அது வாழ்க்கையை காப்பாத்தும்” னு சொன்னார். அவர் பேசி முடிச்சதும், “உங்க கூட ஒரு போட்டோ எடுக்கணும்”னு சொன்னேன். மறுத்துட்டார்..

அதுக்கு அவர் சொன்ன காரணம், ” இன்னா இன்னைக்குத் தான் நீ என்னப்பாத்திருக்க.. எதோ நான் பெருசா என்னைத்தயோ மாத்த வந்தவன்னு ஒன் மனசுல ஓடி..நீ நாலு வார்த்தைய கூட போட்டு எழுதிட்டன்னா .. அதைப்பாக்கவனுக்கு என்ன தோணும்? இவர்ட்ட போனா நமக்கு எதாவது மாற்றம் வரும்னு தோணும். அவன் எதையோ எதிர்பார்த்து இங்க வருவான். அவன் எதிர்பார்த்தது என்கிட்ட இல்லன்னா வர்றவன் மனசு என்ன பாடுபடும் சொல்லு. இந்த உலகத்துலே செய்யக்கூடாத ஒன்னு. எதிர்பார்க்க வச்சி ஏமாத்துதது தான்” ன்னார். மிரண்டுட்டேன்.

அப்புறம் ஊருக்குப் போகும் போதுலாம் டைம் கிடைச்சா ஒரு எட்டு இந்தக் கோயிலுக்குப் போவேன். இவரைப் பார்ப்பேன் பேசுவேன். ஒன்றரை வருசம் கடந்து போச்சு. லாஸ்டா ஊருக்குப் போனதும் இந்த புக்கை கொடுத்தாரு. போட்டோ எடுக்கணும்னு சொன்னேன்..சிரிச்சிக்கிட்டே வா எடுத்துக்கன்னாரு

“உயர்வு நவிற்சியா எதையும் எழுத மாட்டேன்ற நம்பிக்கை அவருக்கு வந்ததுட்டு போல. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு வார்த்தை அவர்ட்ட இருந்து கிடைக்கும். அது நமக்குள்ள இருக்க அகங்காரத்தை உடைக்கும்

அப்புறம் அவர் தந்த இந்த உபதேச மஞ்ஜரீ நூல் பற்றி..

ஸ்ரீ ராமகிருஷ்ணர், இறைவனிடம் சரணடைதலோட சாரம்சத்தைத் தவிர்த்து.. இந்தப்புக்ல பெருசா ஒன்னும் சொல்லிடல. அவர் வாழ்ந்த காலத்துல வகுப்பு வாதம் வரிசை கட்டி நின்றிருக்கும் போல. அந்த ஆரியத்தொனி நூலில் இருக்கு. ” மலம் அள்ளுற தோட்டிக்கு இவ்வளவு திமிர் இருக்கும் போது மத்தவங்களுக்கு எப்படி இல்லாமல் போகும்?” போன்ற சொல்லாடல் எல்லாம் புக்ல சாதாரணமா இருக்கு. இறைவனுக்கு வர்ணபேதம் இல்லன்ற கருத்தைச் சொன்னாலும் போகிற போக்கில் சில அறம்பிறழ் உபதேசங்கள் இருக்கு தான்.

குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தாத உபதேசமும் ஆன்மிகமும் தான் மனித வாழ்வை பாசிட்டிவா நகர்த்தும் என்பது அடியேன் கருத்து. அதனால் தான் இவர்களை எல்லாம் விட ஓஷோ உயர்ந்து நிற்கிறார். ஒரு மனிதன் குற்றவுணர்வின்றி வாழும் கலையை ஓஷோ தவிர யாரும் சொல்ல முடியாது. மேலும் இந்த உபதேச மஞ்ஜரீ வாழ்வை இடித்துப் பழக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. காலங்கடந்தும் நிற்கும் கருத்துக்கள் பல இருந்தாலும் நூல் முழுதாக ஈர்க்கவில்லை

அப்புறம் அபயம் தேடும் மனிதர்களை மனச்சலவை செய்யும் சத்சங்கங்களை ஊக்கு விக்கும் குறிப்புகளும் நூலில் காணப்படுகிறது. ஆன்ம எழுச்சி, வாழ்வின் மலர்ச்சி, அதுதான் மகிழ்ச்சி என கூவியழைக்கும் பல சத்சங்கங்களை பார்த்த அனுபவம் அடியேனுக்கு உண்டு. முழுக்க முழுக்க அவை சுயநலம் சார்ந்து இயங்கினாலும் வாழ்வில் தேவையற்று நம்மோடு பயணிக்கும் சில விசயங்களை இப்படியான சத்சங்கங்கள் அகற்ற வைக்கிறது தான். ஆனால் அதற்காக அவர்கள் சொல்லித்தரும் பாடங்களும், பயிற்று முறைகளும் மறைமுகமாக நம்மை சமூகத்தை விட்டு தனிமைப்படுத்துபவை. உளவியல் ரீதியாக நம்மை அசாதரண மனிதர்கள் என நம்ப வைப்பார்கள். கடுமையான வாழ்க்கைச் சூழலில் உழன்று தவிக்கும் ஆண்/பெண்களுக்கு அவர்கள் விரிக்கும் அந்த வலை சுவையாகவே தெரியும்.

ஞானம் என்பதும் அகவிடுதலை என்பதும் பிறரால் தர முடியாதது. ஆனால் அது பொய் என பறை சாற்றும் சத் சங்கங்களே இங்கு அதிகம். இறை பாதத்தை நம்மால் தொட முடியாது, நிறை மனதை நம்மால் பெற முடியாது என்று நம்மை ஸ்ட்ராங்காக நம்ப வைத்திருக்கிறார்கள். இந்த உண்மையை, கொஞ்சம் புரிந்துகொண்டால் அக விடுதலை கிடைக்குதோ இல்லையோ… மயக்கம் தெளியும்

உபதேச மஞ்ஜரீயை விட, எதார்த்தம் உபதேசிக்கும் சிவலிங்கபுரம் சித்தர் தான் மாஸ்