கொரோனா பாதிப்பானது உலகெங்கும் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது. தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் கால வரையற்ற விடுமுறையினை அறிவித்திருப்பதால், அன்றாடம் வேலை பார்த்து ஊதியம் பெறும் தினக்கூலி தொழிலாளர்கள் அதிக பாதிப்படைந்து வருகின்றனர். இவர்களின் பொருளாதார சிக்கலைத் தீர்க்க, அரசு ஏதேனும் உதவித் தொகை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தென்னிந்திய சினிமா தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்ஸி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும் போது, “லைட்மேன் தொழிலாளி ஒருவர் நிலைமை சரியாக இன்னும் 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்றால், அதுவரை சூழலை சமாளிக்க முடியாது சார்.
கொரோனாவால் இறந்துவிடுவோம் என்பதை விட, பசியால் என் குடும்பம் இறந்துவிடும்’ என்று கூறினார். அது பெரும் வேதனையை அளித்தது. மேலும் பெப்சி அமைப்பில் இது போன்ற தொழிலாளர்கள் 15,000 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்ச தரத்திலான ஒரு மூட்டை அரிசி வழங்கினால் கூட ரூபாய் 1250 செலவாகும். பதினைந்தாயிரம் பேருக்கு என்று பார்த்தால் 2 கோடி வரை செலவாகும். இதை அவர்களுக்கு வழங்கினால் குறைந்தபட்சம் கஞ்சியாவது குடித்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்வர். அதற்கு சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவ வேண்டும். உணவளிப்பீர்; வாழ்வளிப்பீர், நிதியளிப்பீர் என்று பேசியிருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதும். நடிகர் சிவக்குமார் தன் குடும்பத்தின் சார்பாக பத்து லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அது போல் நடிகர் சிவகார்த்திகேயனும் பத்த் லட்சம் நிதியுதவி அளித்து உதவியுள்ளார்.