Tamil Movie Ads News and Videos Portal

உணர்வும் உருவமும்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

இந்தத் தொகுப்பு ரேவதி என்ற திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கைகளின் நிஜங்களைப் பேசியிருக்கும் தொகுப்பு.

திருநங்கைகளின் உடல்தேவை, உணவுத்தேவை, பணத்தேவை, அவர்களின் அன்றாடங்கள், கடைகளில் காசு பிரிக்கும் முறைகள் பற்றி நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் பலவற்றையும் அடித்து நொறுக்குறது அவர்கள் இந்த நூலில் சொல்லி இருக்கும் நிஜங்கள்

நிர்வாணம் (ஆணுறுப்பை அகற்றிக் கொள்ளுதல்) செய்துகொண்ட திருநங்கைகளுக்கும் செய்யாதவர்களுக்கும் இடைவெளியில் ஒரு தீண்டாமை இழையோடியுள்ள அம்சத்தின் மூலம் அவர்கள் அவர்களின் பெண் தன்மையை எவ்வளவு மேன்மையாக உணர்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது…

என் 16 வயதில் படம் பார்த்துவிட்டு வரும்போது மூன்று போலீஸ்காரர்கள் என்னிடம் பலவந்தமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்கள். அவர்களால் என் ஆசனவாயில் தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டது என்று ஒரு திருநங்கை சொல்லும் போது ராட்சசன் படத்தை விட அதிக அதிர்வு ஏற்பட்டது..

கல்யாணம் பண்ணிக்கிட்ட வீட்டுக்காரருக்கு அவர் நோய்ப்பட்ட தருணத்தில் தாயாக மாறிய ஒரு திருநங்கையின் வாழ்க்கை மானுட நேசம் பேசுகிறது..

திருநங்கைகள் சட்டப்படி பிள்ளைகளை தத்தெடுக்க முடியாது. ஆனால் தன் சொந்தக்காரர்களின் பிள்ளைகளை வளர்க்கலாம். அப்படி திருநங்கைகள் வளர்க்க தேர்ந்தெடுப்பது பெண் பிள்ளைகளைத் தான். ஆண்கள் மேல் அவர்களுக்கு இயல்பாகவே ஒருவித அச்சவுணர்வு இருப்பதை இதில் காணமுடிகிறது. தன் சொந்த அண்ணன் மகளை ஒரு திருநங்கை தன் கணவனோடு சேர்ந்து வளர்த்து படிக்க வைத்து திருமணம் வரை கொண்டு வந்துவிடுகிறார். அந்தப்பெண்ணுக்கு ஒரு நல்லது நடக்கும் போது தாய்மாமன் முறைக்கு பெத்த தகப்பனே நிற்க வேண்டிய சூழல். ஆனால் அத்திருநங்கை அதை லாவகமாக சமாளித்து மாற்று ஏற்பாடு செய்கிறார். இந்தக்காட்சியை அத்திருநங்கை சொல்லும் போது இந்த நிஜத்திற்குள் ஓர் அற்புதமான படைப்பு இருப்பதை உணர்ந்தேன்

ஆணுறுப்பில் சிறிய பந்து பட்டாலே பதறும் ஆண் வர்க்கம். அப்படியான வர்க்கத்தில் பிறந்தவர்கள், ரத்தம் தெறித்து உயிர்போகும் வலியை அனுபவித்த படியே தன் பிறப்புறுப்பை அறுத்தெறிய சம்மதிக்கிறார்கள்..கூடவே அதற்கு 40 நாட்கள் பத்தியம் இருந்து 41-ஆம் நாள் விழாவும் நடத்துகிறார்கள்..தங்களின் ஆணுடலை பெண்ணுடலாக்குவதில் இயற்கை அவர்களுக்கு கொடுத்துள்ள வேட்கையை எண்ணி நாம் கொஞ்சம் மனம் மாறத்தான் வேண்டும்.

இப்போது சினிமாவில் அவர்களை இகழ்ச்சி செய்யும் போக்கு மாறியுள்ளது நல்ல முன்னெடுப்பு. உய், ஒம்போது என்ற வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சம் மாறி, அக்கா, ஆன்டி போன்றவற்றை இளைஞர்கள் பயன்படுத்தத் துவங்கி விட்டார்கள்.

இவர்களில் வெகு சிலர் ஏன் தந்தா (Sex work) பண்ணுகிறார்கள், துணியைத் தூக்கிக் காட்டி ஏன் சிலநேரம் எரிச்சல் ஏற்படுத்துகிறார்கள், பிக்பாக்கெட் கஞ்சா போன்ற சட்ட விரோதங்களை ஏன் செய்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்தத் தொகுப்பில் உள்ள திருநங்கைகளின் வாழ்க்கைச் சூழல் பதில் அளிக்கும்.

பெரும்பாலும் ஒரு வீட்டில் ஒரு திருநங்கை உருவாகிவிட்டால் அவர்களை வாழத்தகுதியற்றவராக எண்ணும் மனப்பான்மை சிலரிடம் உள்ளது. நான் நேரில் கண்டிருக்கிறேன். அவர்களை தன் மனிதப்பிறவியில் இருந்து கீழ் இறங்கியவர்களாகப் பார்ப்பதோடு முதல் வேலையாக சொத்தில் பங்கில்லை என்கிறார்கள். இன்னும் சிலர் சாவச்சொல்கிறார்கள்..அல்லது சாவடிக்க முனைகிறார்கள். சிலருக்கு பிறப்பிலே சில இடர்பாடுகள் வந்துவிடுவது போல் …திருநங்கை பிறப்பும் ஒரு இயற்கை நிகழ்வு. இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அரசும் சமூகமும் பல காத்திரமான படைப்பாளர்களும் அவ்வப்போது பேச வேண்டியது பெருங்கடமை என்பேன். நான் ஒரு கதை எழுதுவதற்காகத் தான் திருநங்கைகள் சம்பந்தப்பட்ட நூல்களை வாசித்து வருகிறேன். ஆனால் எழுத நினைத்த கதைகளை விட இந்த நூலில் இருக்கும் நிஜங்கள் திணறடிக்கின்றன.

(சில திருநங்கைகள் அதிகாரம் செய்வார்கள். மிரட்டுவார்கள் சாபமிடுவார்கள். அதெல்லாம் உள்ளூர தங்களுக்கு ஏற்பட்ட தீண்டாமையை போக்கிற்கொள்ள உதவும் உளவியல் மெத்தெட். சில மருத்துவமனைகளில் நர்ஸ்களை விட தூய்மைப்பணியாளர்கள் கடுமையாக நடந்துகொள்வார்கள். நாம் அந்த நேரத்தில் அவர்களைப் பேச நினைத்தாலும் அடக்கிக் கொள்வோம். காரணம் மருத்துவமனைகளில் முடியாதிருக்கும் நமக்கு அவர்கள் ஏதும் உதவி செய்யாமல் போய்விடக்கூடாதென்று. அதே தூய்மைப் பணியாளர் வெளியில் ஒரு இடத்தில் நம் அருகில் கூட வரமாட்டார். அப்படி வந்தால் நாம் அவருக்கு என்னமாதிரியான மரியாதை கொடுப்போம் என்பதை அவர்கள் அறிவர். (எப்பவாவது கால்ல விழுறதுலாம் வேசம்னு அவங்களுக்குத் தெரியும்.) அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு ஜீவனுக்கு அதிகாரம் செலுத்த சின்ன வழி கிடைத்தாலும் அது புகுந்து விளையாடத்தான் செய்யும். அதை நாம் கண்ணியத்தோடு கடந்துவிட வேண்டும். திருநங்கைகள் விசயங்களிலும் நாம் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும்)