இந்த உலகில் எதற்கும் End உண்டு. ஆனால் அன்பிற்கு மட்டும் End கிடையாது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆக எத்தனை முறை பேசப்பட்ட விசயமாக இருந்தாலும் உறுத்தல் இல்லாத வகையில் திரையில் அன்பைப் பரிமாறினால் ரசிகன் ஏற்றுக்கொண்டு விடுவான். உடன்பிறப்பே படத்தோடு நாம் ஒன்றிப்போவதற்கு அண்ணன் தங்கை அன்பே பிரதானமாக இருக்கிறது.
“எதையும் தீர்மானிக்கவும் தீர்ப்பு கொடுக்கவும் நமக்கு அதிகாரம் இல்லை. அதற்குத் தான் சட்டம் இருக்கிறது” என்பவர் ஜோதிகாவின் கணவர் சமுத்திரக்கனி. எல்லாவற்றையும் சட்டப்படி தான் அணுக வேண்டும் என்றால் நீதி என்பது நிறைய பேர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். தப்புன்னா அடிக்கணும்” என்பவர் ஜோதிகாவின் அண்ணன் சசிகுமார். சசிகுமாரின் இந்த அடிதடி குணத்தால் சமுத்திரக்கனி சசிகுமாரை விலகி நிற்க…கணவன் அண்ணனோடு பேசினால் தான் தானும் பேசுவேன் என கனத்த மனதோடு ஜோதிகா இருக்க…அன்பே உருவான அண்ணன் தங்கை குடும்பம் எப்படி இணைகிறது? என்பதே உடன்பிறப்பே
கதையின் நாயகி ஜோதிகா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு இது 50-வது படம் அன்பை பிரதானமாக கொண்டு வந்திருப்பது கூடுதல் சிறப்பு. நல் வாழ்த்துகள். நாம் அவ்வப்போது பார்த்து ரசிக்கும் சசிகுமார் தான் என்றாலும் 50-வயதை தொட்டிருக்கும் அந்தப் பாத்திரத்தில் நிறைந்தே நிற்கிறார். சூரியின் பங்கு படத்தில் நிறைய நிறைவைச் சேர்த்திருக்கிறது. இவர்களுக்கிடையே கிடைக்கும் சின்ன சின்ன கேப்களிலும் ஸ்கோர் செய்கிறார் சமுத்திரக்கனி.
கிராமங்களின் அழகியலை தன் கேமரா கண்களால் அள்ளியெடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். டி.இமானின் இசையில் அண்ணன் யாரண்ணே என்ற பாடல் இனி கொஞ்சகாலம் எல்லா திசையிலும் ஒலிக்கும். பின்னணி இசையிலும் கிராம வாசம்..
இரா.சரவணின் திரைக்கதையை விட வசனங்கள் அதிக இடங்களில் ஸ்கோர் செய்கிறது. படத்தின் மேக்கிங்கும் மிகத்தரமானதாகவே இருக்கிறது. வில்லனாக வரும் கலை அரசன் கதாப்பாத்திரப் படைப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அண்ணன் தங்கை எப்போது பேசிக்கொள்வார்கள்? என்ற பதைபதைப்பை மட்டுமே வைத்து படம் நெடுக ட்ராவல் செய்திருக்கலாம் என்றும் மனதில் தோன்றியது. இவையெல்லாம் சூரியன் முன் கூனிக்குறுகும் பனித்துளி போன்ற நெருடல்கள். அன்பு செலுத்துவதற்கு யார் லாஜிக் பார்ப்பர்?
2D Entertainment எல்லாருக்குமான படத்தை மட்டும் தான் கொடுக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் ஆழமாக விதைத்திருக்கிறது ஜோதிகாவின் உடன்பிறப்பே!
-மு.ஜெகன் கவிராஜ்