த்ரிஷாவின் 18ம் வருட திரைப்பயணம்
தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆயுட்காலம் அந்தக்காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை மிகக் கெட்டியாகவே இருக்கிறது. ஆனால் ஹீரோயின்களின் ஆயுட்காலம் தான் மிகமிகக் குறைவு. ஆனால் அதையும் கூட சமீபகாலமாக சில ஹீரோயின்கள் முறியடித்து வருகிறார்கள். புதுபுது ஹீரோயின்கள் வந்த வண்ணம் இருந்தாலும் கூட, தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்ட ஹீரோயின்களின் வரிசையில் நயன்தாராவைப் போல் த்ரிஷாவும் முக்கியமானவர். 2002ம் ஆண்டு இவர் நாயகியாக நடித்த “மெளனம் பேசியதே” திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து இன்று வரை த்ரிஷா நாயகியாக தென்னிந்திய திரையுலகில் வலம் வருகிறார். இந்தாண்டுடன் அவர் தன்னுடைய திரைப்பயணத்தின் 17 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த “96” திரைப்படம் சற்றே வலுவிழந்து இருந்த அவரது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு ராங்கி, பரமபத விளையாட்டு, கர்ஜனை ஆகிய படங்களோடு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் பொன்னியின் செல்வனும் 2020ம் ஆண்டில் வெளியாகவிருக்கின்றன.