எந்த பரபரப்பும் இன்றி வெளியான த்ரிஷா பட டீஸர்
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகிகளாக நிலைத்திருக்கும் நாயகிகள் இருவர் என்றால் அது நயனும் த்ரிஷாவும் தான். ஆனால் தனித்த நாயகியாக நின்று கோலோச்சும் நயனின் அளவிற்கு இன்னும் த்ரிஷாவிற்கு தனித்த நாயகியாக நின்று வெற்றி தந்த படங்கள் ஏதும் அமையவில்லை. அவர் கதை நாயகியாக நடித்த மோகினி, நாயகி போன்றவை வெற்றியடையவில்லை. மேலும் கர்ஜனை திரைப்படம் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கும் “ராங்கி” பட டீஸர் தர்பார் படத்தின் இசை வெளியீட்டின் போது எந்தவித ஆரவாரமும் இன்றி வெளியானது. இதில் த்ரிஷா துப்பாக்கியைக் கொண்டு சண்டை போடும் காட்சிகளும், கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கதை வசனத்தை முருகதாஸ் எழுதியிருக்கிறார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.