தன் குடும்பத்திற்காக தீயோரை வேட்டையாடும் நாயகனின் கதை
ஹீரோ அருள்நிதி அப்பா பாரதிராஜாவின் அன்பு பிள்ளை. தன் மகனுக்கு வாய்பேச வராது என்பதால் மகன் மேல் அளவு கடந்த அன்பு அப்பாவிற்கு. மகனுக்கும் அப்பா என்றால் உயிர். அந்த அப்பாவிற்கு ஒரு ஆக்ஸிடெண்ட் நடக்கிறது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகிறார்கள். மருத்துவமனையில் சிறிய பொறுப்புகளில் வேலை செய்யும் சிலர் பல சமூகவிரோதங்களைச் செய்துவருகிறார்கள். அவர்களும் அருள் நிதி குடும்பமும் எப்படி லிங் ஆகிறது? என்பதும் அதற்கு அடுத்து நடக்கும் பல வியப்புகளும் தான் திருவின் குரல்
கேட்கும் திறன் சரியாக இல்லாமல், பேசும் திறன் துளியும் இல்லாதவராக நடிக்க வேண்டும் என்றால் அது பெரும் சவால். அந்தச் சவாலை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார் அருள்நிதி. அவர் நடித்த படங்களில் இந்தப்படத்தின் நடிப்புக்கு முதல் மார்க் கொடுக்கலாம். பாரதிராஜா நடிப்பைப் பொறுத்தவரை கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. வில்லனாக ஒரு வயதானவர் நடித்துள்ளார். ஆத்தாடி மனிதர் மிரட்டியிருக்கிறார். அவர் ஸ்கிரீனில் வரும்போதே நமக்குப் பதறத் துவங்கி விடுகிறது
சின்னச் சின்ன சவுண்டிங்கிலும் கவனம் எடுத்து உழைத்திருக்கிறது மிக்ஸிங் டீம். பின்னணி இசை சில இடங்களில் ஏற்றம். பல இடங்களில் ஏமாற்றம். கேமராமேன் இப்படத்திற்கு ஸ்பெசல் எபெக்ட் எடுத்து உழைத்துள்ளார். அந்த உழைப்பிற்கான பதில் ஸ்கிரீனில் தெரிகிறது
மேக்கிங்- ஆக சிறப்பான சம்பவத்தைச் செய்துள்ளார் இயக்குநர். திரைக்கதை கூட ஓரளவு ஓகே தான். ஆனால் படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் நம்மை ஓட்டைப்பிரித்து ஓட வைத்திடும் போல. அவ்ளோ லாஜிக் மிஸ்டேக்ஸ். மேலும் அரசு மருத்துவமனைகள் என்றால் இவ்வளவு மோசமாகத் தான் எளியவர்களை அணுகுமா? அங்கு அடித்தட்டு நிலையில் வேலை செய்பவர்களை இவ்வளவு தீயவர்களாக காட்ட வேண்டுமா? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. கொரானா காலத்தில் ஏழைகளை அக்கறையோடு தத்தெடுத்து காப்பாற்றியவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனை ஊழியர்களே! சினிமா என்பது பலரும் கண்டுகளிக்கும் ஒரு மீடியம். அதில் நாம் பதிவு செய்யும் கருத்துக்கள் சமூகத்திற்கு தவறான கற்பிதத்தைக் கொடுத்து விடக்கூடாது. அதை இயக்குநர் உணர்ந்திருக்க வேண்டும். லாஜிக் கருத்தியல் இரண்டையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் திருவின் குரல் உங்களுக்கு கேட்கலாம். ஆனால் இந்தக் குரல் ஆபத்தானது
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#ThiruvinKural