தேவதைகளின் தேவை! சார்லீஸ் ஏஞ்சல்ஸ்
இவான் கோஃப் மற்றும் பென் ராபர்ட்ஸ் இணைந்து 1976-இல் உருவாக்கிய ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-இல் அதே பெயரில், ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற திரைப்படத் தொடர் துவங்கியது! ஆக்ஷனும் நகைச்சுவையும் கலந்த அத்திரைப்படத்தின் திரைக்கதையமைப்பு, தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தது.
கதைக்கரு இதுதான் – சார்லஸ் டவுன்சீட் என்கிற முகம் தெரியாத ஒரு நபர், தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் பிரதானமாகப் பணிபுரிபவர்கள் – மூன்று பெண் தேவதைகள்! புலனாய்வுத் திறனிலும், ஆண்களுக்கு நிகராக (ஏன், அதை விட ஒருபடி மேலாகவே!) சண்டையிடுவதிலும், கை தேர்ந்தவர்கள்! முதல் பட வெற்றியைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு, ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராடில் (Charlie’s Angels: Full Throttle)’ படமும் வெளியாகி வெற்றியும் பெற்றது!
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற மூன்றாம் பாகமும் தயார்!
அதிரடி ஆக்ஷன் தேவதைகளாக, கிறிஸ்டின் ஸ்டூவர்ட், நயோமி ஸ்காட் மற்றும் எல்லா பெலென்ஸ்கா ஆகியோர் நடித்துள்ளார்.
புலனாய்வு நிறுவனம், பெரியதாகி, பல ஊர்களிலும் பல கிளைகளுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வில்லன்கள் கூட்டம், தொழில்நுட்ப மேம்பாட்டின் உதவியுடன் சில சட்ட விரோத செயல்களில் ஈடுபட முனைய, அவற்றின் பின்விளைவுகள் பெரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஓர் அபாயம் எதிர்நோக்கி நிற்கிறது! தேவதைகளின் ‘சேவை’ தேவைப்படுகிறது! பிறகென்ன? நகைச்சுவை மிளிரும் காட்சியமைப்புகளுக்கு மேலும் மெருகேற்ற அதிரடி ஆக்ஷன் வேறு!
இப்படத்தின் திரைக்கதையை அமைத்து, இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தோன்றியதோடு நில்லாமல், நேர்த்தியாகப் படத்தை இயக்கியுள்ளவர் எலிசெபத் பேங்ஸ் (Elizabeth Banks. ஃபேரியன் ஹாட்ஸ் படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ப்ரையான் டைவர் இசையமைத்துள்ளார். கிம் பேரட் உடையலங்காரங்களை வடிவமைக்க, பில் போப் படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். Sony Pictures நிறுவனத்தின் உருவாக்கம் இப்படம்.