Tamil Movie Ads News and Videos Portal

”ஒரு காதலர் இருந்தார்” – அனுஷ்கா

2004ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் நாயகி அனுஷ்கா. இந்த ஆண்டோடு அவர் தனது நடிப்புப் பயணத்தில் 15ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் உடல் எடையினை மீண்டும் குறைக்க முடியாமல் போனது. அதிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டது. மேலும் அவருக்கு வயதும் 38 நெருங்கிவிட்டதால், அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறார் என்கின்ற செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. இதற்கு பல முறை சாந்தமாகவும் சில முறை கோபமாகவும் பதிலளித்திருக்கும் அனுஷ்கா, முதன்முறையாக தனது காதல் குறித்துப் பேசி இருக்கிறார்.

அதில் “2008ல் நான் ஒருவரைக் காதலித்தேன். இப்பொழுதும் அவரைக் காதலித்துக் கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக அவரது பெயரினைக் கூறியிருப்பேன். ஆனால் சில காரணங்களினால் பிரிந்து விட்டோம். இன்னும் அந்த உறவையும் அந்த நபரையும் நான் மதிக்கிறேன். பிரபாஸும் நானும் காதலிக்கிறோம் என்கின்றனர். அவரும் நானும் பல ஆண்டுகளாக பழகி வருகிறோம். காலை மூன்று மணிக்கு போன் செய்து பேசும் அளவிற்கு அவர் எனக்கு நெருக்கமான நண்பர். அவ்வளவே. நான் மீண்டும் ஒரு காதலை எதிர்கொண்டால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி அவரது திருமணம் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.