உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு ‘தி ஐ’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் இசை திறமையால் உலகம் முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களிடத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இதன் காரணமாக தற்போது திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
இவர் தற்போது நடித்து வரும் ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார். அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ மற்றும் ‘ஒன் டே’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, ‘ட்ரூ ஹாரர்’ படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, ‘தி டச்சஸ்’ பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,
இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். ‘தி ஐ’ போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. ‘தி ஐ’ ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.
#theeye #தி ஐ