“தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்று மிகப்பிரபலம். அந்த வாசகத்தில் தீதையும் நன்றையும் எடுத்து தீதும் நன்றும் எனப்பெயர் வைத்து டைட்டிலிலே ஈர்த்திருக்கிறார் இயக்குநர் ராசு ரஞ்சித்.
ராசு ரஞ்சித், ஈசன் இருவரும் சந்தீப் என்ற நண்பருடன் இணைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். ராசு ரஞ்சித்துக்கு லிஜோமாலுடன் காதல், ஈசனுக்கு அபர்ணா பாலமுரளியுடன் காதல். திருட்டும் காதலுமாய் செல்லும் இவர்கள் வாழ்வில் ஒரு சறுக்கல் வருகிறது. அச்சறுக்கலின் பெருக்கலால் ராசு ரஞ்சித்தும் ஈசனும் போலீஸில் மாட்டுகிறார்கள். வெளியில் வரும்போது சந்தீப், சத்யா இருவரும் அவர்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள். ஈசனும் ராசு ரஞ்சித்தும் எப்படி தங்களுக்கு வந்துள்ள தீதை நன்றாக மாற்றுகிறார்கள் என்பதே மீதிக்கதை.
இயக்குநரான ராசு ரஞ்சித்தே இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். குறையே சொல்ல முடியாத நடிப்பு. உடன் நடித்துள்ள அனைவருக்கும் சம வாய்ப்பைக் கொடுத்து நல்ல கேரக்டர்சேஷனை அமைத்து இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி, ஈசன், லிஜோமால், , சத்யா, கருணாகரன் என அனைவருமே நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.
ஒரு திரில்லர் படத்திற்கான இசையை வழங்கத்தவறவில்லை சத்யா. ஒளிப்பதிவும் படத்தின் பரபரப்பை கூட்டி இருக்கிறது.படத்தின் வேகம் தான் படத்திற்கு பெரிய ப்ளஸ். அலுப்புத் தட்டாத ஸ்கிரீன் ப்ளே.ராசு ரஞ்சித்துக்கு தீதும் நன்றும் நன்மையையே விளைவிக்கும்
-மு.ஜெகன்சேட்