கொரோனா வைரஸின் பாதிப்பு உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதுவரை உலகளவில் 4000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவிலும் ஆங்காங்கே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. இதன் தாக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை குறிப்பிட்ட காலம் வரை மூட முடிவு செய்து, அதன் முதற்கட்டமாக மார்ச் 31ம் தேதி வரை கேரளா முழுக்க திரையரங்குகள் மூடப்பட வேண்டும் எண்று அறிவித்தது. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே, தியேட்டர்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கும் வருமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.