சீனாவில் டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத் தாண்டவம் இன்று கிட்டத்தட்ட 100 நாடுகளுக்குப் பரவிவிட்டது. சீனா, இத்தாலி போன்ற நகரங்கள் பீதியினால் முழுவதுமாக அடைபட்டுக் கிடக்கின்றன. கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், மருத்துவர்கள் என பலரும் அதன் கொடூரத் தாக்குதலில் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். இன்னும் மருத்துவ உலகம் இந்த கொடூர நோயில் இருந்து மனித குலத்தைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் நிறுவனருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உலகமெங்கும் கொரோனோ வைரஸின் பாதிப்பினால் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டு இருக்க, அவர்களின் உயிரைக் காக்க இரவு பகல் பாராது தன்னலம் இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். தனக்கென பாராமல் பிறருக்கென போராடும் உங்களின் சேவையால் தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.