கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் கூட அதை மக்கள் சரியாக கடைபிடிக்க தவறி வருகிறார்கள் என்கின்ற சலிப்பு பல பிரபலங்கள் மத்தியில் நிலவி வருகிறது. ‘விக்ரம் வேதா’ படத்தின் இசையமைப்பாளரான சாம்.சி.எஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து ஒன்றில், “நோயின் பயங்கரம், தனி மனித கட்டுப்பாடு, பிறர் நலன் என எந்தப் பொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை. எல்லாத்தையும் இழுத்து மூடுங்க. யாரும் சொன்னால் கேட்பது போல் தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் நடவடிக்கைகள் பெருமையளிக்கிறது” என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், “அன்னைக்கி அன்னைக்கி வேலைக்கி போனா தான் சார் சாப்பிட முடியும். அப்படி இருக்குற ஏழைநாட்டுல வீட்டுல உக்காந்து கிட்டு இருந்தா மாசா மாசம் கட்ட வேண்டிய கடன் பிரச்சனை எல்லாம் இருக்கு.. உயிர் முக்கியம் தான். அது இருந்தாத் தான் வாழ முடியும். ஆனால் வேலைக்குப் போனாத்தான் வாழ முடியுங்குற சூழலும் இருக்கே சார்..” என்று பதிலளித்துள்ளார். இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க அரசு ஏதாவது துரித நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.