மலையாள நடிகரான ப்ருதிவிராஜ் ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாளப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டின் பாலைவனப்பகுதிக்கு தங்கள் படக்குழுவினருடன் சென்ற மாதம் சென்றிருந்தார். அப்பொழுது வைரஸ் பரவல் அதிகமாக இல்லாத காரணத்தால், அந்த நாட்டு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று பாலைவனத்தில் படப்பிடிப்பும் நடத்தி வந்தனர். ஆனால் திடீரென்று நிலைமை தலைகீழாக மாறியதால், படப்பிடிப்பை ஜோர்டான் அரசு நிறுத்தச் சொல்லியதோடு, தங்கள் நாட்டு எல்லையையும் இழுத்துப் பூட்டியது.
இதனால் படக்குழுவினர் அனைவரும் பாலைவனத்தில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் கைவசம் இருக்கும் உணவு குறைந்து வருவதாக சோஷியல் மீடியாவில் சமீபத்தில் ப்ருதிவிராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மற்ற நடிகர் நடிகைகள் அவருக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஆறுதலாக பேசி வருகின்றனர். மத்திய அரசு ஜோர்டான் அரசிடம் பேசி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளை உறுதிபடுத்தும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது.