பாலை வனத்தில் அவதிப்படும் ஒரு ஜீவனின் கதை
நாவலைத் திரைப்படமாக்கும் வித்தை இன்னும் நமக்கு (வெற்றிமாறன் விதிவிலக்கு) நன்றாக கை வரவில்லை என்பதை உணர்த்தியுள்ளது ஆடு ஜீவிதம். வெளிநாடு செல்லும் பிரித்விராஜ் அங்கு அலைக்கழிக்கப்படுகிறார். அவரின் அலைக்கழிப்பிற்கான காரணமும் தீர்வும் தான் படம்
ஊனை உருக்கி உயிரைத் திருக்கி நன்றாக நடித்துள்ளார் பிரித்விராஜ். ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது உழைப்பு திரையை ஆக்ரமிக்கிறது. இந்தப் படத்தின் எல்லா மைனஸ்களையும் மறந்து பார்க்க வைக்கும் ஒரே ஜீவனாக பிரித்விராஜ் இருக்கிறார். துக்கடா ரோலில் வந்து போகிறார் அமலாபால். மேற்கொண்டு எல்லா நடிகர்களும் தங்கள் பங்களிப்பை கனகச்சிதமாகச் செய்துள்ளனர்.
ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை பெருத்த ஏமாற்றம் தான். பெரியோனே பாடல் மட்டும் ஆறுதல்..பட் அதுவும் விஷுவலில் முழுதாக வரவில்லை. ஒளிப்பதிவு ஆகத்தரமாக அமைந்துள்ளது. அரபு நாட்டின் வெம்மையை அட்டகாசமாக பதிவு செய்துள்ளது. எடிட்டிங் இன்னுமே ஷார்ப்பாக இருந்திருக்கலாம்
நாவலில் இருந்த காத்திரம் திரையில் முழுமையாக பரிணமிக்கவில்லை. நாயகன் படும் இடர்களில் பங்கேற்கும் வித்தையை இயக்குநர் செய்யவில்லை. அதைச் செய்திருந்தால் இப்படத்தோடு நாம் ஜீவித்திருக்க முடியும்
இருப்பினும் பேருழைப்பைச் செலுத்தியுள்ள பிரித்விராஜுக்காக மட்டுமேனும் ஒருமுறை காணலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்