‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு “அயலான்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளரான 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் ராஜா கூறும் போது, “இது தமிழில் உருவாகும் முதல் ஏலியன் திரைப்படம். அயலான் என்ற சொல் ஏலியன் என்பதை குறிப்பதாகும்.
இது குறித்து கூடுதலாக ஒரு வார்த்தை பேசினால் கூட அது படத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுத்துவிடும் என்பதால் படம் குறித்து மேலும் அதிக தகவல்களை கூற முடியாது. படத்தில் நிறைய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளன. மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும்..” என்று தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சயின்ஸ் பிக்ஷன் வகைத் திரைப்படமாக உருவாகிவரும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.