தணிக்கை அதிகாரிகளை பயமுறுத்திய இருட்டு
விடிவி கணேஷ் தயாரிப்பில் தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கிய வி.இஷட் துரை இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் “இருட்டு”. முஸ்லீம் மதப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த பேய்க்கதையில் ஹீரோவாக சுந்தர் சி நடித்துள்ளார். இவருக்கு நாயகியாக சாக்ஷி செளத்ரி நடித்துள்ளார். மேலும் சாய் தன்ஷிகா, விமலா ராமன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் படம் மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதால் ”ஏ” சான்று தான் தருவோம் என்று கூறியிருக்கிறார்கள். பேய் படம் எடுப்பதே பயமுறுத்துவதை அடிப்படையாகக் கொண்டு தானே என்று இயக்குநர் தரப்பு வாதிட்டும் தணிக்கைத் துறை அதிகாரிகள் அதை ஏற்கவில்லையாம். இறுதியில் பயமுறுத்தும் காட்சிகளில் கணிசமான காட்சிகளின் நீளத்தைக் குறைத்தும், பயமுறுத்தும் தன்மையைக் குறைத்தும், “யு/ஏ” சான்று பெற்று திரும்பியிருக்கிறது படக்குழு.