Tamil Movie Ads News and Videos Portal

தண்டட்டி- விமர்சனம்

மண்வாசனை மிகுந்த தரமான படங்களை காணாமல் உறங்கிக் கிடந்த தமிழ்சினிமாவை தண்டட்டி வந்து தட்டி எழுப்பியிருக்கிறது

தேனிமாவட்டம் கிடாரிபெட்டி கதை நிலவும் நிலம். கதையை நகர்த்தும் அற்புத காரணியாக ஒரு கிழவியின் காதணி (தண்டட்டி) இருக்கிறது. அந்தக் காதணிக்குப் பின்னால் ஒரு வலி மிகுந்த காதல் இருக்கிறது. அந்தத் தண்டட்டியை, காவல் காக்கவும் தொலைந்த பின் கண்டுபுடிக்கவும் முயலும் ஒரு எளிய காவலதிகாரிக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. வெள்ளந்தி மனிதர்களோடும், பட்டென வெடித்து சட்டென உடையும் ஈர நெஞ்சங்களோடும் நகரும் இப்படத்தின் கதையை முழுமையாக விவரிப்பது ரசிப்புத் தடையை ஏற்படுத்தலாம். அதனால் இந்த விமர்சனத்தில் கதையைச் சொல்லவில்லை

நம் சமகாலத்தில் நாம் போற்றத்தகுந்த நடிகனாக தன்னை நிலை நிறுத்தியவர் பசுபதி. இந்தப்படத்தின் ஆரம்பத்தில் இவர் கதையில் அந்நியமாக நிற்கிறாரே..நல்லா நடித்தாலும் கதையில் அந்த நடிகருக்கான பிடிமானம் இல்லாவிட்டால் நடிப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். நமது இந்த மனநிலைக்கு படத்தின் பின்பாதியில் ஒரு சம்மடியடி கொடுத்தார் இயக்குநர். யெஸ் கதையின் மொத்த சாரம்சமும் பசுபதி மீதே! அதை மிகச்சிறப்பாக உள்வாங்கி அட்டகாசமாக நடித்துள்ளார். ரோஹினிக்குள் இருக்கும் அபாரமான நடிப்பாற்றல் இப்படத்தில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் அவர் வெளிப்படுத்தும் ஒரு முகபாவம் ஒரு சோறுபதம். ஏனைய கேரக்டர்களில் அதீத கவனம் ஈர்ப்பது அப்பத்தாவின் பேரனான விடலைச் சிறுவன். அடுத்ததாக தேனி மாவட்ட மக்களாக நடித்துள்ள நிஜ முகங்கள் அனைவருமே அற்புதம். விவேக் பிரசன்னா தன்னால் ஆன எல்லா அம்சத்தையும் தன் நடிப்பின் வழி வழங்கியுள்ளார். காஸ்டிங்லே தண்டட்டி பெரும் இலக்கை அடைந்துவிட்டது

எங்கோ கேட்டது போல இருந்தாலும் திரும்பவும் கேட்கணும் போல இருக்கும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பட்டினத்தாரின் தாய்ப்பற்றிய கவிதையை பாடலாக மாற்றியது விதம் இசையில் ஹைலட். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு வழக்கம் போல தனிப்பதிவாக மிளிர்ந்தது. எந்த முகத்திற்கு க்ளோசப் வைக்கணும், எந்தக் காட்சிக்கு எந்த ரேஞ்சில் ஷாட் வைக்கணும் என விஷுவலாக படத்தை அவர் ரசித்து ரசித்து செதுக்கியுள்ளார்.

சின்னச் சின்ன விசயங்கள் கூட படத்தில் நம் அட்டன்ஷனை கிரியேட் செய்கிறது. அந்த வகையில் ராம் சங்கையா இயக்குநராக நச் என தடம் பதித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ஆழமும் நேர்த்தியும் படம் நெடுக இருந்திருக்கலாம். ஆயினும் தமிழ்சினிமாவில் தண்டட்டி ஓர் அவசியமான..அட்டகாசமான பதிவு
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Thandatti #தண்டட்டி