Tamil Movie Ads News and Videos Portal

தலைவி- விமர்சனம்

வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு இருட்டில் இருப்பவர்களைத் தெரியாது. ஆனால் இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தில் இருப்பவர்கள் நன்றாகத் தெரியும். 35 வயதை தாண்டியிருக்கும் அனைவருக்குமே ஓரளவு ஜெயலலிதாவின் மேலோட்டமான அரசியல் & சினிமா வரலாறு தெரிந்திருக்கும். ஆக தெரிந்த வரலாறை சிறந்த முறையில் சொன்னால் தான் திரையில் அது எடுபடும். அதற்கான மெனக்கெடலுக்கு இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு பாராட்டு!

ஜெயலலிதாவின் சினிமா என்ட்ரி, எம்.ஜி.ஆருடன் சந்திப்பு, அவர்கள் இருவரின் பயணம், ஆர்.எம். வீரப்பன் ஜெயலலிதாவிற்மான ஆடுபுலி ஆட்டம், எம்.ஜி.ஆர் இறப்பு, சட்டமன்ற துகிலுரிதல், பின் ஜெயா போராடி ஜெயித்து சட்டமன்றத்திற்குள் செல்வது…இவ்வளத்தையும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

கங்கணா, அரவிந்தசாமி கங்கணம் கட்டிக்கொண்டு வெளுத்தெடுக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சினிமா உடல்மொழி, நார்மல் உடல்மொழி இரண்டையும் வேறுபடுத்தி வெளிப்படுத்தி இருக்கிறார் அரவிந்த சாமி. கங்கணா ரணவத் எம்.ஜி.ஆர் மறைவிற்கு அவரது தலை அருகில் இருக்கும் காட்சியில் அட அட டச்சோ டச்! குறிப்பாக ஜானகியாக வரும் மதுபாலா எம்.ஜி.ஆர் உடல் அருகே வரும்போது கங்கணா காட்டும் ரியாக்‌ஷன் நைஸ் வெரி நைஸ். ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் வரும் சமுத்திரக்கனி அதகளப்படுத்தி இருக்கிறார்…ஆனால் இந்தப்படத்தை ஆர்.எம். வீரப்பன் பார்த்தா……? சோ சேடு! பத்திரிகையாளர் செந்தில் குமரன் பல காட்சிகளில் வருகிறார். ஒரு காட்சியில் அசத்தி இருக்கிறார். அவர் அரவிந்தசாமியிடம் பேசும் ஒரு வசனம் அல்டிமேட்!

படத்தில் காட்டப்படும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் உறவின் தன்மைக்கும் நிஜத்தில் நடந்தவற்றுக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதாக பாகுபாடு பார்க்காமல் அரசியல் பேசும் அனைவருமே சொல்வார்கள். குறிப்பாக ஜெயலலிதா எம்.ஜி ஆரை கடவுளாக எண்ணி வாழ்ந்ததாகவும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தேவதையின் மறு வடிவமாக பாவித்து உருகி மறுகுவதையும் திரையில் பார்க்கும் போது மெரினாவில் இருக்கும் இரண்டு சமாதிகளும் கலங்கிப் போகும் என்றே தோன்றுகிறது..

ஒரு படத்தின் மையக் கதாப்பாத்திரம் தன் இலக்கை அடைய போராடும் போதும், போராடி இலக்கை அடையும் போதும் நாம் அந்தக் கேரக்டரோடே ட்ராவல் செய்வோம். அந்தக் கேரக்டரின் வெற்றி நமது வெற்றியாக தோன்றும். ஒரு நல்ல திரைக்கதை மற்றும் கதாப்பாத்திர உருவாக்கத்தில் அந்த அற்புதம் நிகழும். ஆனால் இந்தப் படத்தின் இறுதியில் அம்மா சட்டமன்றத்திற்குள் செல்லும் போது, சரி நாமளும் அப்ப வீட்டுக்கு கிளம்பலாம் என்றே தோன்றுகிறது…படத்தின் ஆகப்பெரும் சறுக்கல் இந்த ஏரியா. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்குமான ஈகோ யுத்தம் துவங்கும் இடம் நல்லாருந்தது. சேம்டைம், கருணாநிதியிடம் இருந்து இந்த மண்ணையும் மக்களையும் மீட்டெடுப்பதே தனது லட்சியம் என்பதாக எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கட்டமைத்து, தி.மு.க ஒரு ஆகப்பெரும் ஆபத்து இயக்கம் என்ற தோற்றத்தையும் வரவழைக்க பிரயத்தனப்பட்டிருக்கிறார் இயக்குநர். உ.பிக்களுக்கு கன்டென்ட் இருக்குங்க.

பெண்ணியத்தின் பெருமையை பேசுவதன் வாயிலாக லேசாக பிராமணியத்தின் நெடியை தூவி விட்டிருக்கிறார் இயக்குநர். மத்தபடி விஷுவலாக படம் நல்ல குவாலிட்டி. வசனங்களும் செம்ம ஷார்ப்…ஒருவரின் வரலாறை சினிமாவாக எடுக்கும் போது அவர்களின் பாசிட்டிவ் ஏரியாவை காட்டினால் தான் ஹீரோயிசம் எடுபடும்..ஆனால் அது ப்ராப்பரான பதிவா இருக்காது..தலைவியும் அப்படித்தானுங்….

மு.ஜெகன் கவிராஜ்