ஏற்கனவே ஹிட்டடித்த படத்தின் அடுத்த பாகம் என்றால் இயல்பாகவே நமக்குள் ஓர் எதிர்பார்ப்பு எழும்..அந்த எதிர்பார்ப்பை தலைநகரம்2 நிறைவு செய்துள்ளதா?
தென்சென்னையில் ஒரு டான், மத்திய சென்னையில் ஒரு டான், வடசென்னையில் ஒரு டான்! இந்த மூன்று டான்களும் முன்னால் டான் ஆன சுந்தர் சி வாழ்வில் எப்படி குறுக்கிடுகிறார்கள்? சுந்தர் சி அவர்களை எப்படி சுளுக்கெடுக்கிறார் என்பதே கதை
அளவாக நடித்தாலே அழகாக இருக்கும் என சுந்தர் சி இப்பவும் நம்புகிறார் போல. ஒரு தாதாவுக்கான கம்பீரம் அவர் கெட்டப்பில் இருக்கும் அளவிற்கு அவர் நடிப்பில் இல்லை. நாயகிகள் என இருவர் சும்மா வந்து செல்லாமல் நடிக்கவும் செய்கிறார்கள். அவர்கள் நடிக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உறுதி செய்கிறார்கள் பாவம். மூன்று வில்லன்களும் மூன்று அக்காக்களும் வேறலெவல் ரகம். ஒவ்வொரு டீமும் வில்லனத்தில் போட்டி போட்டு மிரட்டியுள்ளது
பின்னணி இசையில் ஜிப்ரான் படத்தை ஒரு நல்ல ஆக்ஷன் மூட்-க்கு கொண்டு வந்துள்ளார். பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஒளிப்பதிவு படத்தில் அல்டிமேட்டாக அமைந்துள்ளது. ஒருசில இடங்களில் இன்னும் பிரமாதமான ஷாட்ஸை வைத்திருக்கலாம் எனத் தோன்றியது
மூன்று வில்லன்களுக்கு ஒவ்வொரு பின்கதை. அந்த வில்லன்கள் ஒவ்வொருவரும் எதார்த்தமாக சுந்தர் சி life-ல் டிஸ்டர்ப் ஆவது என ஸ்கிரீன் ரைட்டிங்-ஆக இயக்குநர் Z.துரை நன்றாக உழைத்துள்ளார். பர்ஸ்ட் ஹாப் படம் மிகச்சிறப்பாகவே பயணிக்கிறது. ஆட்டோ சங்கர் வெப்சீரிஸின் ரைட்டர் மணிஜியின் ஷார்ப்பான வசனங்களும் படத்தை என்கேஜிங்காகவே வைத்துள்ளது. பின்பாதியில் தான் படம் மிகவும் வீக்-ஆன திரைக்கதையால் படுத்துவிடுகிறது. தலைநகரம் முதல் பாகத்தில் கதைக்குள் வடிவேலுவின் காமெடியை கொண்டு வந்து பேமிலி ஆடியன்ஸுக்கும் ட்ரீட் கொடுத்திருப்பார் இயக்குநர் இந்தப்படத்தில் அதுவும் மிஸ்ஸிங். மேலும் செத்துப்பிழைத்து வந்து சண்டை போடுவது எம்.ஜி.ஆராக இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். சுந்தர் சி எம்.ஜி.ஆரையும் தாண்டி பில்டப் செய்வது நம்பியார் போல நம் கையை பிசைய வைக்கிறது. சுந்தர் சி நடிப்பில் வெளியான முந்தைய படத்திற்கு இப்படம் பரவாயில்லை என்பது மட்டுமே ஆறுதல்
தலைநகரம்2- பிழைநகரம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Thalainagaram2 #தலைநகரம்2