வித்தியாசப் பார்த்திபன் இப்படத்தில் என்ன வித்தியாசம் காட்டியுள்ளார்?
13 வயது நிரம்பிய சிறுவர்கள் ஒரு கொண்டாட்ட திட்டம் போடுகிறார்கள். அந்தத் திட்டத்திற்குப் பின்னால் ஒரு சின்ன குழந்தைத் தன ஈகோ இருக்கிறது. அவர்களின் திட்டப்படியே ஒரு இடத்திற்கு பெற்றோர்களிடம் சொல்லாமலே போகிறார்கள். அவர்களின் பயணத்தில் ஏற்படும் அதிர்ச்சிகள் தான் படத்தின் கதை
சிறுவர்களை நடிக்க வைப்பதே சிரமம். அதுவும் நன்றாக நடிக்க வைக்க வேண்டுமானால் ரொம்பவும் சிரமம். ஆனால் பார்த்திபன் போராடி எல்லாச் சிறார்களையும் திறம்பட நடிக்க வைத்துள்ளார். பார்த்திபன் வரும் காட்சிகள் ஓரளவு நன்றாகவே உள்ளது. யோகிபாபு சம்பந்தமில்லாமல் திணிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் க்ரீன்மேட்-ஐ ஞாபகப்படுத்துகிறது
இமானின் இசை துள்ளலாகவும் இல்லை. எள்ளல் செய்யும் படி மோசமாகவும் இல்லை. இயற்கையிலே ஒரு கவிஞரான பார்த்திபன் நல்ல பாட்டு ஒன்றையாவது இமானிடமிருந்து வாங்கியிருக்கலாம். ஒளிப்பதிவு சில இடங்களில் கவர்கிறது. பல இடங்களில் தவறுகிறது. CG உள்ளிட்ட சில டெக்னிக்கல் ஏரியாக்களில் பார்த்திபன் இன்னும் நன்றாக உழைப்பைச் செலுத்த வைத்திருக்கலாம். பட்ஜெட் காரணமோ?!
திரைக்கதை மற்றும் வசனங்களில் ரசிகனுக்கு திடீர் தீனி போடும் பார்த்திபன் இப்படத்தில் அதைச் செய்யத்தவறியுள்ளார். செறிவான காட்சிகளுக்குப் பதிலாக பல புரியாத காட்சிகளே உள்ளன. ஒவ்வொரு படத்திலும் புதியபாதை போட்டு பயணிக்கும் பார்த்திபன் இந்தப் படத்தில் புரியாத பாதை போட்டுள்ளதால் நம்மால் குழப்பமின்றி பயணிக்க முடியவில்லை.
இருப்பினும் கடுமையான வணிக வளை நிறைந்த தமிழ்சினிமாவில் சிறுவர்களுக்கான படமெடுக்கத் துணிந்தமைக்காக பார்த்திபனைப் பாராட்டலாம்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்