எடுத்துக் கொண்ட கதை ஸ்டெடியாக இருந்தால் ஒரு சின்ன டெடியை வைத்தே திரைக்கதையில் வெடி வைக்க முடியும் என உணர்த்திருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்திரராஜன். அறிவால் அனைத்தும் சாத்தியம் என நம்பும் நாயகன் ஆர்யா. சைக்காலஜியில் இருந்து, மருத்துவம், உலகஷேர் மார்க்கெட் வரை அலசி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேயும் ஆர்யாவிடம் ஒரு பொம்மை உயிர்பெற்று வந்து உதவி கேட்கிறது. அந்தப்பொம்மைக்குள் இருக்கும் உயிர் ஒரு பெண்ணின் உயிர். அந்த உயிரை அப்பெண்ணின் நிஜ உடலோடு இணைக்க முடியும் என்ற புள்ளியை நோக்கி ஆர்யா பயணிக்கிறார். அதில் அவர் எப்படி வெற்றிபெற்றார் என்பதே டெடியின் ஆட்டம்.
ஆட்டம் பாட்டம் எதுவுமில்லாத சீரியஸ் நடிப்பு இதில் ஆர்யாவுக்கு. தன் பலம் உணர்ந்து களம் இறங்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சரி எமோஷ்னல் ஏரியாவிலும் சரி பாத்திரத்தை உணர்ந்து நிரப்பி இருக்கிறார். படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் கதையில் நிறைவாக இடம் பிடித்துள்ளார் சாயிஷா. சதிஷ், கருணாகரன், மாசூம் சங்கர், சாக்ஷி அகர்வால் ஆகியோர் தேவைக்கேற்ப நடிப்பை கொடுத்துள்ளார்கள். வில்லனாக இயக்குநர் மகிழ்திருமேனி குரலில் உள்ள கம்பீரத்தை நடிப்பில் கொண்டுவர போராடியிருக்கிறார்.
பின்னணி இசையில் பேய் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் இமான். விஸ்வாசம் டைப் படங்கள் மட்டும் அல்ல..இதுவும் என் ஏரியா தான் என படமெங்கும் அதகளம் செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவிலும் ஒர் கலை நேர்த்தி இருக்கிறது. ஒரு பொம்மைக்குள் உயிர்..அதைப் பேய் என ஈசியாக கடந்துபோக விடாமல் ..இயக்குநர் ஒரு ஐடியா பிடித்திருக்கிறார். நிஜமாகவே அல்டிமேட் ரகம். சில இடங்களில் லாஜிக் உறுத்தி நின்றாலும்..படத்தைக் குடும்பத்தோடு சென்று பார்க்கும் அனுபவத்தைப் பொருத்திப் பார்த்தால் பிழையாக தெரியாது.
மருத்துவ க்ரைம்களை பலரும் பலவிதமாக சொல்லியிருந்தாலும் அது என்றென்றும் சொல்லப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது என்பதே உண்மை. ஓடிடி-யில் இந்தப் படத்தைப் பார்க்கும் எல்லோருக்கும் ஒரு விசயம் மனதில் நச்சென்று தோன்றும்.அடடா தியேட்டர்ல பார்த்தா செம்மயா இருக்குமே.