பேரிடர் காலங்கள் வந்தாலே தமிழக மக்களிடையே அதன் நிவாரணத்திற்காக தனக்கு பிரியமான நடிகர் எவ்வளவு நிதி அளித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளும் அவா அதிகரிக்கும். அதுக்கு ஏற்றார் போல் மீடியாக்களும் சினிமா பிரமுகர்கள் எவ்வளவு நிதி உதவி செய்தார்கள் என்பதை பிரகடனப்படுத்தி விளம்பரப்படுத்தும். இந்த வழக்கம் தற்போதைய வைரஸ் தாக்கத்திலும் ஆரம்பமாகி உள்ளது. ஏற்கனவே தொழில்கள் தடைபட்டதால், அன்றாட உழைப்பாளர்களான சினிமா தொழிலாளிகள் பட்டினி கிடப்பதை தவிர்க்க நடிகர், நடிகைகள் பொருள் உதவி செய்ய வேண்டும் என்று பெப்சி அமைப்பின் சார்பாக கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
இன்று வரை தமிழ் சினிமா நடிகர்களில் சூர்யா குடும்பம் 10 இலட்சம், ரஜினி 50 இலட்சம், சிவகார்த்திகேயன் 10 இலட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் 1 இலட்சம், பிரகாஷ்ராஜ் 150 மூடைகள் அரிசி, தாணு 250 மூடைகள் அரிசி, வழங்கியுள்ளனர். மேலும் சில சிறு நடிகர்களும் உதவி செய்துள்ளனர். இதில் முக்கிய நடிகர்களான அஜீத், விஜய், ஆகியோர் இன்னும் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. பெப்ஸிக்கும் இன்னும் நிதியுதவி தரவில்லை. மாநில மற்றும் மத்திய அரசுக்கும் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. ஆனால் தெலுங்கு திரையுலகத்தில் நடிகர் பிரபாஸ் 4 கோடி, பவன் கல்யாண் 2 கோடி, மகேஷ்பாபு 1 கோடி, அல்லு அர்ஜூன் 1.25 கோடி, ராணா டகுபதி தன் புரொடெக்ஷன் நிறுவனம் சார்பாக 1 கோடி என்று வாரி வழங்கி வருகின்றனர்.