Tamil Movie Ads News and Videos Portal

ஸ்வீட் காரம் காபி- விமர்சனம்

அடுப்பூதும் கேர்ள்ஸுக்கு ட்ரிப் எதுக்கு? என்று மதுமிதாவின் கணவரும், லட்சுமியின் மகனும், சந்தியின் அப்பாவுமான ஒருவர் எதிர்க்கிறார். ஆனால் லட்சுமி, மதுமிதா, சந்தி மூவருக்கும் மனரீதியான மாற்றத்திற்கு ஒரு பயணம் அவசியமாக இருக்கிறது. குறிப்பாக லெட்சுமிக்கு தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட அங்கமான ஒருவரை சந்திக்க இந்தப்பயணம் தேவையாயிருக்கிறது. லட்சுமியின் மருமகள் மதுமிதாவிற்கு, “தன்பலம் அறிந்து தன் சுயம் ஜெயிக்க” இப்பயணம் அவசியமாக இருக்கிறது. லட்சுமியின் பேத்தியான சந்திக்கோ தன் காதலன் உடனான மனக்கசப்பை மறக்க இப்படியொரு பயணம் தேவையாய் இருக்கிறது. இந்நிலையில் மூவரும் ஒரு திட்டம் போட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்புகிறார்கள். இந்தப்பயணத்தில் இவர்கள் அடையும் திறப்புகள் என்ன? என்பதும் நமக்கு கிடைத்த சிறப்புகள் என்ன? என்பதும் தான் சீரிஸின் கதையாக விரிகிறது. 8 எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடரின் பலம் என்ன என்பதைப் பார்க்கலாம்!

லட்சுமி, மதுபாலா, சந்தி மூன்று பெண்களும் முதல் எபிசோடிலே நமக்குள் நிறைந்து நிற்கிறார்கள். லட்சுமியின் நடிப்பு நம்மை வெகுவாக கவர்கிறது. நம் வீட்டிலும் இப்படி ஜாலியான ஒரு பாட்டி இருந்தால் எப்படி இருக்கும்? என்று ஏங்க வைக்கிறார். மதுபாலா வெகுளி, அன்பு, அக்கறை, ஆற்றாமை என அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கதைக்கேற்ற நடிப்பை வழங்கிய விதத்தில் சந்தியும் கவர்கிறார்.

சீரிஸை சிறப்பாக்கிய இன்னொரு அம்சம் ஒளிப்பதிவு. மிகத்தரமான ஒளிப்பதிவை நன்றாக ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் 96 படத்தின் சாயல் நிறைய இருந்தாலும் ரசிக்க முடிகிறது

வெகு இலகுவான கதை என்பதால் எட்டு எபிசோட் என்பது நமக்குச் சின்ன சோர்வை ஏற்படுத்துகிறது. சுருங்கச் சொல்லி இன்னும் சிறப்பான மேக்கிங்கை கொடுத்திருக்கலாம். பெண்களின் அகவழி பாய்ச்சலை அர்த்தத்துடன் பகிர்ந்தமைக்கு இயக்குநர்களை பாராட்டியே ஆகவேண்டும். சீரிஸின் நீளத்தை இன்னும் இழுத்துப் பிடித்திருந்தால் சீரிஸ் நம்மை உள்ளிழுத்திருக்கும்.

நிறைய பொறுமையோடு அமர்ந்து ஸ்வீட் காரம் காபி எடுத்து வைத்து பார்த்தால் இந்த சீரிஸ் உங்களுக்குப் பிடிக்கும். முக்கியமாக ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது
-மு.ஜெகன் கவிராஜ்